கோதாட்டம்
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா குறித்து கருத்துத் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிச்சேர்ந்த ப்ரபுல் படேல் ' இதுவும் ஒருவகை ஜும்லாஸ் ' என்றார்.
பிஜேபி உடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசக்கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கச்சொல்லி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. வாக்கெடுப்பு நாளன்று உரையாற்றிய ராகுல்காந்தி , 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் ஆயுதம் 'ஜூம்லா தாக்குதல்' என்றவர் இதன் அறிகுறிகள் முதலில் உற்சாகம், அடுத்து மகிழ்ச்சி, கடைசியாக பெரும் அதிர்ச்சி ' என்றார். இச்சொல் இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் தென் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட சொல் இதுதான்.
'மோடியின் நான்காண்டுகால வேதனைகள் ' சீத்தாராம் யெச்சூரி எழுதிய ஒரு கட்டுரையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ' நரேந்திர மோடியின் முழக்கங்கள் அனைத்துமே தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட ‘ஜும்லாஸ்’ (‘jumlas’) வாக்குறுதிகளே'. இக்கட்டுரை ' ச.வீரமணி மொழிபெயர்ப்பில் மே 28 2018 , தீக்கதிரில் வெளியானது. டிவிட்டர் இணையதளம் நரேந்திர மோடியை ' பக்கோடா ஜூம்லா மனிதன்' என்றது. காமதேனு ஆகஸ்ட் 31, வார இதழ் ' இந்த மாயமொழிக்காரரை என்ன செய்வது ? ' - பிரசாந்த் பூஷன் சாடல் பேட்டியில் மோடியை ' ஜூமல்மேன் ' என்றிருந்தார்.
அது என்ன ஜூம்லா?
ஆக்ஸ்போர்டு அரபிக் சொற்களஞ்சியம் ஜூம்லா என்பது உருதுச் சொல் என்கிறது. இதன் பொருள் ' மொத்தம், மதிப்பீடு , உட்கூறு , ஒரு வாக்கியம் ' என்பதாகும்.
மிர் ஜூம்லா , முகலாய ஷாஜகானுக்கு தளபதியாக இருந்தவன். இவனொரு வைர வியாபாரி. இவன் ஷாஜகானுக்கு கொடுத்த அன்பளிப்பு வைரமே கோஹினூர் வைரம் என்பதாக ஒரு கதை உண்டு.
' ஜூம்லா - ஒரு செவிலியரின் கதை ' நேபாள எழுத்தாளர் ராதா பவுடல் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இங்கு ஜூம்லா என்பது நேபாளம் நாட்டிலுள்ள ஒரு மாவட்டம்.
இதே சொல் இந்தியிலும் உண்டு. 1500000×1250000000 = 1875000000000000 / - இத்தொகையை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? இதன் பெயரே ஜூம்லா என்கிறார் கியூக்வான் புலு. அதாவது, எந்தவொரு காலத்திலும் நிறைவேற்ற வாய்ப்பில்லாத பொய்யான வாக்குறுதிகளே 'ஜூம்லாஸ்' ( Jumlas ). இச்சொல்லிருந்து உருவான புதிய ஆங்கிலச் சொல் Jumlanomics - Jumla - Economocs .
ஜூம்லா என்பது பித்தலாட்டம் என்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. பித்தல் என்பது முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏமாற்றுவது. இச்சொல் பித்தலாடகம் என்பதின் திரிபாகும். பித்தலை +ஆடகம்=பித்தலாடகம். ஆடகம் என்பது ஹாடகம் எனும் சம்ஸ்கிருத மொழியின் திரிபு; இதன் பொருள் பொன் என்பதாகும். ஆகவே பித்தலாடகம் என்பதற்கு பித்தலையைப் பொன் என ஏமாற்றுதல் என்றாகி பிறகு அது எல்லாவித ஏமாற்றுதலுக்கும் அப்பதமாகிப் போனது. ஒன்றை வேறொன்றாக ஏமாற்றுவது பித்தலாட்டம். அப்படியென்றால் முடியாத ஒன்றை அல்லது இயலாத ஒன்றை என்னால் முடியும் என்று ஏமாற்றுவதை எச்சொல்லால் அழைக்கலாம்...?
'கோதாட்டம்'
'கோதாட் டொழி ' என்கிறது ஔவையாரின் ஆத்திசூடி. பேச்சால் ஏமாற்றும் குற்றமுள்ள ஆட்டத்தை தவிர் என்பது இதன் பொருள். பண்டிதர் அயோத்திதாசர் கோது என்பது பிறருக்குத் துன்பத்தைத் தருவிக்கும் சொல் என்கிறார்.
A Dictionary Of The Tamil And English Languages, Volume1 By Johann Peter Rottler அகராதி கோதாட் டொழி என்பதை cease to play a sinful play என்கிறது.
கோதாகொடுத்தல் என்பது சென்னை வழக்கு. அதாவது, ஏமாற்றிவிட்டுப் போதல். Chennai Univercity Tamil Lexicon Dictionary - Page 1184.
கோத்துவிடுதல், கோத்துவாங்குதல், கோத்தல் இதன் தொடர்புடைய பிற சொற்கள். இதன் வேர்ச்சொல் ' கோதல்' . இதன் பொருள் கேடு விளைவித்தல் அல்லது ஏமாற்றுதல்.
இதலிருந்து ஜூம்லா என்பதை பித்தலாட்டம், வஞ்சிக்கை என பல சொற்களால் விளித்தாலும் கோதாட்டம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக