அலர்
'தேனி நகர் அரசியல் - வெல்லும் தனிநபர் பாத்திரம் '- விசாகனின் கட்டுரை நூல். ஒரு மாவட்டம், அதன் எல்லை , மக்கட்தொகை, கல்வி என்னும் பிற விழுக்காடுகளுடன் மாவட்டம், நகர் குறித்த புள்ளி விபர நூல்களுக்கு மத்தியில் இந்நூல் முற்றிலும் மாறுபட்டது. தேனி நகரில் சாதி, மதம், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இடதுசாரி, தலித் அமைப்புகள் - அந்த அமைப்பில் தலையெடுக்கும் தனி நபர் பாத்திரங்களைப் பற்றி பேசியிருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐந்திணை தமிழன்னையின் கிரீடம் என நாம் நினைத்துக்கொண்டிருக்க சாதிய கட்டமைப்பின் தோற்றுவாய் ஐந்திணைதான் என்கிறது, சாதி குறித்த தலைப்பினலான ஒரு கட்டுரை.
மதம் என்கிற கட்டுரையின் கீழ் ஒரு கவிதை - ' வேர் ஒன்றைத் தேடி வா, போ/ நான் நம்பக்கூடிய தோழியர் யாரும் எனக்கில்லை / நான் வேண்டாம் என்றபோது நீ கேட்கவில்லை / இப்போது எனக்கு மாதவிலக்கு வரவில்லை/ என் கணவன் வீட்டில் இல்லை / வேர் ஒன்றைத் தேடிவா, போ / என்னை பழிக்கு இலக்காக்கிக் கொண்டேன்/ உன்னைச் சொல்லி என்ன பயன்? / உணவில் ருசியும் இல்லை, நான் என்ன செய்வேன்?/ மருத்துவச்சியிடம் போய் மருந்து ஒன்று வாங்கி வா/ பெண்கள் அலர் பேசத் தொடங்கும் முன்னால் / வேர் ஒன்றைத் தேடி வா, போ...' என நீள்கிறது அக்கவிதை . ஆங்கிலத்திலிருந்து தமிழுகுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதை இது .
கவிதை புரிகிறது. அலர் என்பது என்ன?
அலரறிவுறுத்தல் - திருக்குறளில் 115 ஆவது அதிகாரம்.
அலரிற் தோன்றும் காமத்தின் சிறப்பே - தொல்காப்பியம்.
பூவின் பருவங்கள் - அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல். இங்கு அலர் என்பது மலர்ந்த நிலை.
'அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் ' - திருமங்கை ஆழ்வாரின் ஒரு பாடல் வரி .
அமெரிக்க வாசிங்டன் டிசியில் குறுந்தொகை மாநாடு நடைப்பெற்றது ( 2017 ) . அதில் அகத்தியன் பெனடிக்ட் உரையாற்றிய தலைப்பு - குறுந்தொகையில் அலர்.
கண்மணி குணசேகரன் எழுதிய 'அஞ்சலை ' நாவலில் இச்சொல் இடம் பெற்றுள்ளது.
'நா'வலர் சில நேரம் நா 'அலர்' ஆகிவிடுவதுண்டு - ஒரு பேச்சு வழக்கு.
'அலர்' தமயந்தி எழுதிய ஒரு சிறுகதை. நளினி, கலை, ஜோதி மூவரும் நெருங்கிய தோழிகள். நளினி வசதியான குடும்பப் பெண். அவள் பள்ளியில் படிக்கையிலேயே திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். கலை, கல்லூரி பருவத்தில் திருமணம் செய்துகொண்டு கணவன் தன் மீது சந்தேகப்படுகிறானென சேர்ந்து வாழாமல் பிறந்த வீட்டுக்கு வந்துவிடுகிறாள். அப்படியாகப் பிரிவதற்குக் காரணக்கருத்தானாக இருக்கிறான் செல்வன் என்கிற பள்ளியக்கால ஒரு தலைக் காதலன். அவன் ஒருநாள் கலைக்கு குறுந்தகவல் அனுப்புகிறான் ' என் மனைவி எனக்குப் பிடிக்கவில்லை. அவள் அழகில்லை ' என்று. இச்செய்தி ஜோதிக்கு தெரியவருகிறது. எனக்கு வாய்க்கப்போகும் கணவனும் இப்படிதான், என்னைப் பற்றி அடுத்தவன் மனைவியிடம் சொல்வானோ,...! அவள் திருமணத்தை வெறுக்கிறாள்.
கணவனிடம் சேர்ந்து வாழாமல் பிறந்த வீட்டுக்கு வந்திருக்கும் கலையிடம் ஜோதி உரையாடுமிடம் முற்போக்கானது. ' ஆம்பளைங்க எல்லாம் ரொம்ப ஓவியமோ? எவ முந்தாணை எங்க விலகும்னு அலையுற பயல்பவ. இவ்ளோ ஏன், எங்கப்பன் அசிங்கம் புடிச்ச புஸ்தகத்த ஒளிச்சு வெச்சு வாசிக்கு. '
' அசிங்கமாப் பேசாதே'
' ஆமாமா, இதப் பேசினா அசிங்கம். செஞ்சா கலாச்சாரம். ....த்தூ '.
அலர் - இதே பெயரில் கே.ஜே.அசோக்குமார் ஒரு கதை எழுதியிருக்கிறார்.
'ஔவியம் பேசேல் ' - நாஞ்சில் நாடன் எழுதிய ஒரு கட்டுரையில் 'கௌ ' எழுத்தில் துவங்கும் 66 சொற்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அதிலொரு சொல் கௌவை. இச்சொல்லுக்கு பிங்கல நிகண்டின் படி கீழ்க்கண்டவாறு விளக்கம் கொடுத்திருக்கிறார். கௌவை - அலர் , கள், வெளிப்பாடு, துன்பம், பழிச்சொல்,...ஆங்கிலத்தில் slander.
'புறங்கூறுதல்' என்று பொருள் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக