ஐவரி

நடிகர் சிவக்குமார் ஆனந்த விகடனில் 'கருணாநிதி கும்பிட்ட கடவுள் ' என்கிற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் கலைஞர் உடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். அதிலொரு அனுபவம் : சிவக்குமார், தான் எழுதித் தொகுத்த ' ராஜபாட்டை' என்கிற கட்டுரை நூலுக்கு   அணிந்துரை எழுதித் தர வேண்டி கலைஞரிடம் கொடுத்திருக்கிறார்.  அதை வாங்கி வைத்துகொண்ட கலைஞர் இரண்டு நாட்கள் கழித்து போன் செய்து வீட்டுக்கு வரச்சொல்லி அவர் எழுதிய அணிந்துரையை சிவக்குமாரிடம் கொடுத்திருக்கிறார்.  அவர் எழுதிய அணிந்துரை இவ்வாறு இருந்தது. ' தம்பி சிவக்குமார், இந்த ' ராஜபாட்டை 'நூலைக்கொடுத்து ஒரு வரி அணிந்துரை எழுதித் தரச்சொன்னார். இதிலுள்ள அத்தனை வரிகளும் ஐவரி '.

அது என்னதாம் ' ஐவரி '?

 ஆப்பிரிக்க கண்டத்தில் ஐவரி கோஸ்ட் என்றொரு நாடு இருக்கிறது. இந்நாடு சாக்லெட்டின் தாயகம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு பலரால் ஐவரி என்றே அழைக்கப்படுகிறது. சிவக்குமாரின் கட்டுரைகள் சாக்லெட் அளவிற்கு தித்திப்பாக இருக்கிறது என அந்த அணிந்துரையின் வாயிலாக சொல்ல வருகிறாரா கலைஞர்?

மனு.எஸ்.பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் ஐவரி த்ரோன்  என்றொரு சுயசரிதை நூல் எழுதினார். அந்நூலுக்குக்கூட 2017 ஆம் ஆண்டு யுவ புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இச்செய்தி ஐவரியுடன் தொடர்புடைய ஒன்று அவ்வளவே

 கலைஞர் சுட்டிக்காட்டிக்கும் ஐவரி பெயர்ச்சொல் தொடர்பானது அல்ல. இலக்க வடிவத்துடன் தொடர்புடைய காரணப் பெயரினாலான ஒன்று, அப்படியாகவே அவரது அணிந்துரையிலிருந்து  புரிந்துகொள்ள முடிகிறது.

ஐவரி - யானையின் தந்தம்

திரைப்பட பாடல் ஆசிரியர் மதன்கார்க்கி ஏப்ரல் 22, காமதேனு இதழில் இதன் தொடர்பாக ஒரு பத்தி எழுதியிருக்கிறார்.வெண்பா, வஞ்சிப்பா, ஹைக்கூ வடிவம் போல ஐந்து வரிகளைக் கொண்ட ஒரு புதுக்கவிதை ஐவரி. லிமரிக்கூ என்றொரு கவி வடிவமுண்டு. அதே போன்ற வரி வடிவம்தான் ஐவரி. அதாவது ஐந்து வரிகள் கொண்ட ஒரு கவிதையில் முதல் இரண்டு வரிகள் ஒத்த அசை அமைப்பைக் கொண்டும் மூன்றாம்,நான்காம் வரிகள் ஒத்த அசை அமைப்பைக் கொண்டும் ஐந்தாம் வரி இரண்டு சொற்களில் முடிந்தால் அக்கவிதை ஐவரி என்பதாக கார்க்கி வரையறை செய்துள்ளார்.

இந்த வரையறையை வைத்துகொண்டு தேடுகையில் தேவிவேலு என்கிற கவிஞர் எழுதிய கவிதை ஐவரி இலக்கணத்துடன்  பொருந்தி போயிருந்தது

மயிலாட மேகங்கள் இருக்கு
உறவாட மோகங்கள் இருக்கு
சொன்னாலென்ன நேரேதான்
வந்தாலென்ன கூடத்தான்
அழகே அழகே

ஐவரி என்கிற கவி வடிவம் இன்னும் பெயரால் பெரிய அளவில் புலக்கத்திற்கு வரவில்லை. ஆயினும் கலைஞர் இருபது வருடங்களுக்கு முன்பே அவர் எழுதிய அணிந்துரையில் இச்சொல்லை கையாண்டிருப்பது வியப்பளிக்கவே செய்கிறது.

ஐவரி என்பது ஐந்து வரி இலக்கணக் கவிதை எனலாமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்