பொங்கோதம்
வலைதளங்களில் பாராட்டும் , எதிர்ப்புமென
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது surf excel சலவைத்தூள் விளம்பரம். இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கும் பல்வேறு நறுமண பொருட்களில் ஒன்று சர்ஃப் எக்ஸெல்.
ஹோலி பண்டிகையை மனதில் வைத்து, 'வண்ணங்கள் நம்மை ஒன்றிணைக்கிறது' ( ரங் லாயே சங்) என்ற கோஷத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த இந்த விளம்பரப் படத்தில் இரண்டு இளம் சிறார்கள் நடித்திருந்தனர். ஒரு இந்து சிறுமி , சைக்கிளில் தான் குடியிருக்கும் குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வந்தபடியே, தன்மீது சாயத் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை அடிக்குமாறு கூறுகிறாள். அங்கிருக்கும் சிறுவர்களும் அவள்மீது கலர் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை அடிக்கிறார்கள். இதில், அவளது ஆடை முழுவதும் கலர் அப்பிக்கொள்கிறது. அதேசமயம், சிறுவர்களிடம் மேற்கொண்டு அடிப்பதற்கு பலூன்கள் இல்லாமல் காலியானவுடன், தனது நண்பனான இஸ்லாமிய சிறுவனை வெளியில் வருமாறு சைகை செய்கிறாள். தூய வெண்மையான ஆடை மற்றும் தலையில் குல்லா அணிந்து வரும் அந்தச் சிறுவனை, அந்தச் சிறுமி தனது சைக்கிளில் ஏற்றிச்சென்று, அருகில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்காக இறக்கிவிட்டுச் செல்கிறாள். அப்போது, "கறை நல்லது" என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் முடிவடைகிறது.
மத நல்லிணக்கவாதிகள் இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுக்க, இந்துத்துவவாதிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
Excel என்பது இலத்தீன் சொல் ex ( அப்பால் ) + celsus ( உயரமான) - excellere. இச்சொல்லின் சுருங்கிய வடிவமே excel.
கணினி - கணிதத் துறையில் excel
பெரும் பயன்பாட்டு மென்பொருளாக இருக்கிறது. இது 1,048,576 நிரல்களையும், 16,384 வரிசைகளையும் கொண்டது. மின்னணு விரிதாள் மென்பொருள் என்கிறது மணவை முஸ்தபா தொகுத்த கணினி களஞ்சியப் பேரகராதி.
Excel என்பதற்கு அதிகப்படுத்துதல் என்றொரு பொருள் உண்டு. சரி, surf என்பது என்ன?
Surf சலவைத்தூள் , சலவைக்கட்டியுடன் தொடர்புடையது என்பதால் நுரை , அழுக்கு , கறை இவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
அலைச் சறுக்கு விளையாட்டு கடற்கரையோர நாடுகளில் பிரபலமான ஒன்று. ஒரு தக்கையின் மீது நின்று, சீறும் கடலலைகளில் முன்னேறி செல்வர். ஆங்கிலத்தில் இந்த விளையாட்டிற்கு surfing என்று பெயர். நுரையிலிருந்து சறுக்குதல் என்று பொருள்.
சர்ஃப் இசை என்றொரு இசைக்கோர்ப்பு உண்டு. இந்த இசையில் தேர்ந்தவர் - Roddy Frame. இதற்கு பொங்கும் இசை என்று பொருள்.
Surf என்பதற்கு ஆங்கில அகராதிகள் பல பொருள்கள் தருகின்றன : அலை , நுரை, நீர்த்தடம், ஓத நீர்த்திரை, கடல்நுரைத்திரள்,பொங்கோதம், அலை பொங்குங் கடற்கரை, நீர்ப்பரப்பு, இப்படியாக...இதில் பொங்கோதம் நல்ல பயன்பாட்டுச் சொல்.
முத்தொள்ளாயிரத்தில் இச்சொல் இடம் பெற்றுள்ளது. சோழன் புகழ்க்குறித்து ஒரு பெண் பாடும் பாடலில், கனவில் சோழனைக் கண்ட என் கண்கள் அவனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டன. அவனை நேரில் காணுகையில் வெட்கத்தால் மூடிக்கொண்டன. நுரைத்துப் பொங்கும் கடலலையைக் கிழித்துப்பாயும் கப்பலையொத்தவன் அவன் என்பது பாடல் சொல்லும் செய்தியாகும். ' இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்'
காந்திமதியம்மை பிள்ளைத்தமிழில் இச்சொல் இடம் பெற்றுள்ளது.
'பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்' என்கிறது நாச்சியார் திருமொழி.
'பொங்கோதம் கடைநாளில் விரிஅரவ மந்தரஞ்சூழ்' என்கிறது பெரியபுராணம்.
'பூத்தொழியாப் பிண்டிப் பொங்கோத வண்ணனே' - சீவகசிந்தாமணி
பொங்கும்+ ஓதம் என்பதே பொங்கோதம். ஓதம் என்பது முழுநிலவு மற்றும் அமாவாசை அன்று வழக்கத்திற்கு மாறாக கடலின் மட்டம் பொங்கி மேலெழும்புவதாகும். இந்நேரத்தில்தான் மாலுமிகள் கப்பலை துறைமுகத்திலிருந்து கிளப்புவார்கள். ஓதம் என்பதற்கு ஈரம் காத்தல் என்றொரு பொருளும் உண்டு.
Ocean என்கிற ஆங்கில சொல்லின் மூலச்சொல் ஓதமே. ஓதம் - okeanos ( சமஸ்கிருதம் ) , - ocean ( பெருங்கடல் ) என்கிறார் Anatoly liberman என்கிற ரஷ்ய மொழிப்பிறப்பியல் ஆய்வாளர்.
Unde என்கிற கிரேக்க சொல் ஆங்கிலத்தில் tide என்றானது . இதற்கு அலை அல்லது ஓதம் என்று பொருள். Surf என்கிற பெயரில் சலவைத்தூள் இருப்பதைப் போல tide பெயரிலும் சலவைத்தூள் இருக்கிறது. இரண்டும் நுரையுடன் தொடர்புடைய சொற்கள். Tide என்பது ஓதம் , Surf பொங்கோதம்.
கருத்துகள்
கருத்துரையிடுக