பொருநன்


'போலி தேசப்பற்றுக்கான முதல் விதி  '  அரசியல் கருத்தியலாளர்  ஜி.சம்பத் எழுதிய ஒரு கட்டுரை. அதில், தன்
தேசப்பற்றை இவ்வாறு வெளிபடுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.  1. கட்டுரையின் ஒவ்வொரு பத்தி முடிவிலும்   ஜெய் ஹிந்த் என எழுதிவிடுகிறேன்.  2. அரசைக் கேள்வி கேட்க மாட்டேன்  3. ஆண்டி இந்தியன் என்கிற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறேன். இக்கட்டுரைக்கு அவர் சூட்டியத்  தலைப்பு 'The first rule of jingo '.

ஒரு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக் விஜய்சிங் , நரேந்திரமோடியை warmonger modi என அழைத்திருந்தார். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகான மோடியின் நடவடிக்கையை வைத்து அவ்வாறு அழைத்திருந்தார்.

தேர்தலுக்காக , மக்களைக் கவரும் பொருட்டு நரேந்திர மோடி தன் பெயருக்கு முன்  chowkidar  என்கிற சொல்லை இணைத்துக்கொண்டார். சௌகிடார் என்கிற இந்தி சொல்லுக்கு காவலர் ( guard ) என்று பொருள்.

Jingo , warmonger , chowkidar இம்மூன்றும் மோடி தலைமையிலான பாஜக கட்சியின் தேர்தல் பரப்புரைச் சொற்கள்.  இவை  போர் அல்லது பாதுகாப்புடன்  தொடர்புடையவை. இம்மூன்று சொற்களுக்கும் நிகரான  ஒரு  தமிழ்ச்சொல் , 'பொருநர்'.

தமிழ் இலக்கிய பத்துப்பாட்டுகளில் ஒன்று  பொருநராற்றுப்படை.  சேரன் உடனான போரில் வெற்றிப்பெற்ற சோழன் கரிகால் பெருவளத்தானின் போர்த்திறமையைப் பற்றி முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்டது.

கரிகாற்பெருவளத்தானைப் புகழ்பாடி  பரிசல் பெற்ற பொருநன் ஒருவன், எதிரே வந்த வறுமையான பொருநனைப் பார்த்து நீயும் புகழ்பாடி பரிசல் பெற்று வருவாய்' என ஆற்றுப்படுத்துகிறான்.

கூத்தர், பாணர், பொருநர், விறலி நான்வரும் ஆற்றுப்படை பாத்திரங்கள்.

அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்பு வாணிகர் (உமணர்), உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், புண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவனர், யாழ்ப்புலவர், யானைப்பாகர், யானைவேட்டுவர், வடவடுகர், வண்ணாத்தி, வணிகர், வலைஞர், பேடர்’ இவையாவும்  பண்டை காலத் தொழில் பிரிவினர் என்கிறார்  உ.வே.சாமிநாதர்.

பொருநர் மூன்று  வகையினர் -  ஏர்க்களம் பொருநர், போர்க்களம் பொருநர், பரணி பொருநர். Jingo , warmonger , chowkidar
மூன்றும் பின்னிருவரைக் குறிக்கும் சொற்களாகும்.

பொருநராற்றுப்படையில் பொருநர் என்கிற சொல் சோழன் கரிகாலன் , ஆற்றுப்படுத்தப்பாடும் புலவர் இருவரையும் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. உதாரணம்,
'அவை புகு பொருநர் பறையின் ஆனாது'(புலவன்) - அகநானூறு.

'பொருநர் காணா செருமிகு முன்பின்' ( வீரன் ) - புறநானூறு) .

பொரு என்பதற்கு போர்செய், தாக்கு, வாதாடு, ஒப்பாகு, பொருந்து, அலைமோது,... எனப் பல பொருளுண்டு. பொருகளம் - யுத்தக்களம் ; பொருபுவி - யுத்த பூமி ( சதுர அகராதி).

கிணைப் பொருநர் என்கிறது சிலப்பதிகாரம். அதாவது கிணை என்கிற இசைக் கருவியை இசைத்துப் பாடுபவர்.

அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடும்  ஔவையார், ' எம்முளும் உளன் ஒரு பொருநன்' இங்கு பொருநன் என்பவன், ஒரு நாளுக்கு எட்டு தேர்கள் செய்யும் தச்சன் ஒரு மாதம் முழுதும் முயன்று ஒரு தேரின் காலினைச் செய்தால் அந்த ஒரு காலிற்கு நிகரானவன்.

பொருநன் , பொருநர் இரண்டும் ஒன்றுதான் என்றாலும் பொருநன் என்பதே  இலக்கியத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது. பொருநன் என்கிற பெயரில் குறுநில மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆரிய பொருநன் என்றொரு மன்னன், அவன்  பாணன் மீது நேரடி போரில் இறங்கி தாக்குதல் தொடுக்க அவனது ஒரு கை மூட்டு இறங்கி கீழே விழ பாணன் வெற்றி பெறலானான். பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்த எழுவரில் ஒருவன் பொருநன்.

'குருமணி யானை இயல்தேர்ப் பொருநன் ' என்கிறது பரிபாடல். இங்கு பொருநன் என்பவன் யானையை அடக்கி ஆளும் வீரன்.

பாரதியார் இயற்றிய தாயின் மணிக்கொடி பாரீர் பாடலில் 'செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந்
தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர்' . இங்கு பொருநர் என்பது நாட்டுப்பற்று மிக்கவன்.

சூடாமணி நிகண்டு ; பொருநர் என்பதற்கு  படைத்தலைவன், நாடகர், அரசர், பாணர், வீரர் எனப் பொருள் தருகிறது. அதாவது, வீரன் - warrior ; அரசன் - king ; தலைவன் - chieftain ; எதிரி - enemy ; நடிகர் - actor யாவும் பொருநனைக் குறிக்கும் சொற்களே.

பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம்,  பொருநர் என்பவர் 'நாடகத்தில்  வேடம் பூண்டு ஆடுபவர் போல வேறொருவர் கோலம் கொண்டு வருபவர் ' என்கிறார்.

'நடிப்பில் வல்லவர் பொருநரே ' என்கிறார் இராசமாணிக்கனார்.


இதிலிருந்து  பொருநன் என்பதற்கு  அரசன் , புலவன் , வீரன் ( காவலன்) எனப் பல பொருள் இருந்தாலும்  மகாகூத்தன்  என்றும் பொருள் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்