பொருண்மொழி


17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் கதாநாயகன் - மாநில, தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள். 

CONGRESS WILL DELIVER ( நாங்கள் செய்வோம் ) - காங்கிரஸ்.

சங்கல்ப் பத்ரா ( உறுதிமொழி பத்திரம் ) - பாஜக 

MA MAATI  MANUSHER ( தாய், தாய்நாடு , மக்கள் ) - திரிணாமுல் காங்கிரஸ்.

Mee Bhavishyattu Naa Badhyata ( உங்கள் எதிர்காலம் எமது  பொறுப்பு ) - தெலுங்கு தேசம்

இதுதவிர திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்),....கட்சிகள் தேர்தல் அறிக்கை என்றே வாக்குறுதிகளை வெளியிட்டன.

தேர்தல் அறிக்கையும், வாக்குறுதியும் வேறு வேறு.  கட்சியின் கொள்கை முடிவு என்பதே Manifasto. இதற்கு பகட்டு, சுவரொட்டி, அறிக்கை, இலட்சியம் எனப் பல பொருளுண்டு.  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை  நிறைவேற்றுவேனென உறுதியளிப்பது Poll promise. இதனை நிச்சயம், உறுதி, வாக்குறுதி,...எனப் பொருள் கொள்ளலாம். 


1967 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் அறிக்கையில் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இவ்விரு சொல்லும் உள்ளடங்கிய ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டது. 'ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்'. 

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் , ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு 72 ஆயிரம் ரூபாய் - manifasto

நூறு நாள் வேலை வாய்ப்பு 150 நாட்களாக நீட்டிப்பு -  promise

Manifasto என்பது Manifestum என்கிற இத்தாலிச்சொல்லிருந்து வந்தது.  Paolo Sarpi என்கிற இத்தாலியர் 'ஆலோசனைப் போக்கின் வரலாறு ' என்றொரு நூலை எழுதினார். இதை Nathaniel Brent என்பவர்
 ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்,  அந்நூலில் முதல் முறையாக  இச்சொல் இடம்பெற்றது.

Manifeste, என்கிற சொல்லுக்கு பிரஞ்சு தமிழ் அகராதி - பிரசித்தம், வெளிப்படை, திஷ்டாந்தம், விளக்கம், வெளி, வெளியரங்கம், தெளிவான, பராசியமான, விளம்பரம், அறிக்கை, அறிவிப்பு, பிரசித்தப்பத்திரிகை என பொருள் தருகிறது.

 கட்சிகள் தேர்தல் அறிக்கையாக வாக்குறுதிகளை அள்ளி வீசி  வாக்குகள் கேட்க; இன்னொரு புறம்
வேட்பாளரின் சாதியைச் சொல்லி வாக்குகள் கேட்கும் அவலமும் , பணத்திற்காக வாக்குகளை விற்கும்  படலமும் அரங்கேறுகிறது. 

சமத்துவ , பொதுவுடைமை, மதநல்லிணக்கவாதிகள் ' என் வாக்கு என் உரிமை ',  ' என் வாக்கு விற்பனைக்கு அன்று' ; ' வாக்கை விற்கிறவன் வாழ்க்கையை விற்கிறான் ' ; 'நோட்டுக்கு வோட்டு நாட்டுக்கு வேட்டு' என்பதாக  மொழியாற்றுகிறார்கள். 

'நம் ஒவ்வொருவரின் அடையாளமும் அவரவர் வாக்குதான் ' - பாடலாசிரியர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

'என் முகத்தில் உள்ள கோடுகளை என் விரலில் வைக்கப்பட்டுள்ள மை தீர்மானிக்கும்'  வயது மூப்பில்லாத ஜனநாயகம் -இது  இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள  அறிக்கை.  இத்தகைய அறிவிக்கைக்கு என்னப் பெயர்? 

தமிழில் பொருண்மொழிக் காஞ்சி என்றொரு இலக்கணத்துறை  இருக்கிறது. கணியன் பூங்குன்றனார் இயற்றிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்கிற புறநானூற்றுப் பாடல் அவ்வகையைச் சார்ந்தது. உலகின் முதல் பொதுவுடமை சிந்தனை இதுதான். இதே போன்று ஔவையாரின் 'எவ்வழி நல்லவ ராடவர்  /அவ்வழி நல்லை, வாழிய நிலனே ' 

 'உடுப்பது நாழி ; உடுப்பது இரண்டே' (மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்).

சரி, பொருண்மொழிக்காஞ்சி என்பது?

உலக மாற்றங்கள் நிலையில்லாதவை. இந்த நிலையில்லாத உலகில் நிலைபேறுடைய புகழ் நிரல்களைக் கூறுவது காஞ்சித்திணை என்கிறது, தொல்காப்பியம்.

மூதுரை, முதுமொழிக் காஞ்சி, வாழ்க்கை நிலையாமை, பொருண்மொழிக் காஞ்சி, புத்தேள் உலகம் - ஆகியவை நல்வாழ்வு  குறித்து பேசக்கூடியவை என்கிறது  புறப்பொருள் வெண்பாமாலை .

பொருண் என்பதற்கு பொருள் என்று பொருள்.

மெய்ப்பொருள் - மெய்ப்பொருண்

Head of a subject - முகவுரை , பொருண்மை, பொழிப்புரை.

பொருண் - நிறை ( mass) என்றொரு பொருளும் உண்டு. 

பொருண்மயக்கம் , பொருண்மன்னன்,  பொருண்மை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள். 

பொருண்முடிவு - செய்தி முடிவு , முடிந்த கருத்து, பயனிலை , பொருள் முற்றிய சொற்றொடர்.

பொருண்முரணணி - பொருள் முரண்படத் தொடுக்கும் ஒரு வகை அணி (Antithesis )

பொருண்மை - கருத்துப்பொருள் என்கிறது தொல்காப்பியம் (சொல்லதிகாரம்).

பொருண்மொழி என்பதற்கு சத்தியச்சொல், பொய்யாமை, அகம்பாடு, வாய்மை, தூயச்சொல், கிருதாந்தம், தப்பாமொழி, வாய்ச்சுத்தம், தத்துவம், உண்மைச்சொல், அணிபொருள், உபதேசம் எனப் பல பொருளுண்டு.

' பொய்க்கரி போகன்மின், பொருண்மொழி நீங்கன்மின்' என்கிறது சிலப்பதிகாரம். 

 பொய்க்கரி போகன்மின் ( பொய்ச்சாட்சிக்கு போகாதே)  என்பதை 'நடுவுநிலைமை' என்றும் பொருண்மொழி நீங்கன்மின் என்பதற்கு   'மெய்யுணர்தல்' என்றும் அதிகாரம் கொள்கிறது திருக்குறள். 

இதிலிருந்து பொருண்மொழி என்பதை  மெய்யுரைச்சொல் ( truthful utterance)  என்றுச் சொல்லலாம்.
             
பிரசுரம் தீக்கதிர், வண்ணக்கதிர் ஏப்ரல்14, 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்