கிரமம்

'அனொனிமா ( முகம் மறைந்தவள் ) ' இரண்டாம் உலகப் போரின் போது தனது கற்பை தற்காத்துக்கொள்ள தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் நாட்குறிப்பு பதிவுகள் . இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர் ஆதவன் தீட்சண்யா. மொழிப்பெயர்ப்பு  சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் தேவா.

'ஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் வேறு பாதையில் செல்லவும்' என்பது ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கும் முன்னுரையின் தலைப்பு.  முன்னுரையின் நடுப்பகுதியில் இப்படியாக ஓரிடம்.

"தங்களில் இன்னும் கன்னி கழிக்கப்படாதவளாய் இருப்பது யார் என்று பெண்களுக்குள் நடக்கும் விவாதங்கள் அவளுக்கு ( அனோனிமா) சிரிப்பையே வரவழைக்கிறது. கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருத்தி 24 முறை வல்லுறவுக் காளானாள் என்ற பத்திரிகைச் செய்தியைக் கேள்விப்பட்டதும் , இதையெல்லாம் அருகிலிருந்து யார்தான் கிரமமாக எண்ணுகிறார்களோ என்று கேலி செய்கிறாள்...''

வாசிக்கும் பொழுதே இதயத்தை நடுங்கச் செய்யும் வரிகள் இவை. அது என்னதாம் ' கிரமம்..? '

 யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' என்கிற நூலில் பாரதி செல்லம்மாள் உரையாடல் வருகிறது. செல்லம்மாள்  சொல்கிறார் ' வீட்டின் ஓடுகள் உடைந்து கூரை ஒழுகுகிறது. வேறொரு  வீடு பாருங்கள் ' என்கிறார். அதற்கு பாரதி "செல்லம்மா, நீ அவ்வளவு தூரம் அலுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதை பேசி முடித்துவிட்டேன். நல்ல நாள் பார்த்துகொண்டு நாம் அங்கே போக வேண்டியதுதான் பாக்கி. இனி மாதத்தில் சில நாள் மௌன விரதம் என்று கிரகம் செய்து விடுகிறேன். புதிய சொல், அதாவது ஓம் எனபதைப் போல தமிழில் ஒரு பதம் கண்டுபிடித்தாக வேண்டும்...."

இதே சொல் இயற்கணிதத்தில் குலம் , கிரமம் என்கிற பதமாக வருகிறது. அக்கிரமம், ஆக்கிரமம், அபக்கிரமம், அனுக்கிரமம்,பராக்கிரமம்,...இவை இதனுடன் தொடர்புடைய பிற சொற்கள்.

வை. சுந்தரேச வாண்டையார் தொகுத்த '30 கல்வெட்டுகள்' என்கிற நூல் , கிரமம் என்பது வேதம் ஓதும்  வகைகளில் ஒரு வகை என்கிறது.  சம்ஹிதா, பதம், கிரமம்,கனம்,ஜடா . இதில் கிரமம் என்பது முறைப்படி வேதத்தை ஓதுதல். கி.ரா தொகுத்த வழக்குச் சொல்லகராதி கிரமம் என்பது இயற்கையாகக் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறை என்றும் சீட்டாட்டத்தில் பயன்படும் சொல்  என்றும் விளக்கம் தந்திருக்கிறது. 

இதிலிருந்து நாமொரு முடிவிற்கு வரலாம். கிரமம் என்கிற சொல்லிற்கு 'ஒழுங்கு' எனப் பொருள் கொள்ளலாமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்