குழூஉக்குறி
Et, Tu, Bruto ? - இதுவே ஆங்கிலத்தில் You too Brutus ? ( நீயும் கூடவா புரூட்டஸ்?) . ஜூலியஸ் சீசர் இறப்பதற்கு முன்னால் உச்சரித்த கடைசி சொற்றொடர் இது.
ஜூலியஸ் சீசர் - ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகம். போரில் வெற்றிவாகை சூடிய சீசரைக் கொண்டாட ரோம் மக்கள் சூழ்ந்திருக்க புரூட்டஸ், சீசரைக் கொல்ல திட்டம் தீட்டுகிறான். குடியரசு நாடாக இருக்கும் ரோம் , சீசரின் அடுத்தடுத்த வெற்றியால் முடியாட்சியை நோக்கி நகர்கிறதே என்கிற கோபம்தான் சீசரைக் கொலை செய்யத் தூண்டுகிறது. கொலைக்குப்பிறகான இறுதி அஞ்சலி கூட்டத்தில் புரூட்டஸ் பேசுகிறான். 'நான் சீசர் மீது பேரன்பு காட்டுகிறவன். அதற்கும் மேலாக ரோம் மீது காட்டுகிறேன்...' இந்த நாடகத்தில் இரண்டு புரூட்டஸ் வருகிறார்கள். மார்க்கஸ் புரூட்டஸ் , டெசியஸ் புரூட்டஸ்.
சீசரின் மனைவி கல்பூர்னியா, குறி சொல்லி இருவரின் வேண்டலையும் ஏற்று செனட் அவைக்குச் செல்ல மறுக்கும் சீசரை பேச்சால் கவர்ந்து அழைத்து வருபவன் டெசியஸ் புரூட்டஸ். சீசரின் இடுப்பில் முதலில் வாளினை காஷியஸ் பாய்ச்ச, முப்பது காயங்களுக்குப் பிறகு கடைசியாக முதுகில் குத்துகிறான் மார்க்கஸ் புரூட்டஸ். இவன் சீசரின் நெருங்கிய நண்பன். அவனைப் பார்த்து சீசர் கண்ணீர் மல்க சொல்வதுதான் ' நீயும் கூடவா புரூட்டஸ்?'.
சீசரைக் கொல்லும் பத்து சதிகாரர்களில் மார்க்கஸ் புரூட்டஸ் மட்டுமே பொதுநலமிக்கவன் என்கிறது ஷேக்ஸ்பியர் நாடகம். மற்றவர்கள் பொறாமைக்காரர்கள். நாடகத்தில் சீசருக்கு கிடைத்த ராஜமரியாதை புரூட்டஸ்க்கும் கிடைக்கிறது.
ஷேக்ஸ்பியரின் 14 நாடகங்களை தமிழாக்கம் செய்த பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன், ஜூலியஸ் சீசர் நாடகத்தில் குழூஉக்குறி என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
களம் - 5 , காட்சி - 5 ( கடைசி காட்சி ) இல் புரூட்டஸ், கிளைட்டஸ் இருவரும் போர்க்களத்தில் உரையாடுகிறார்கள்.
கிளைட்டஸ் :-நமது சாரணன் ஸ்டாட்டிலியஸ் தீவட்டி ஒளி காட்டினான். ஆனால் பிரபு!அவன் திரும்பி வரவில்லை. அதனால் அவன் அந்தோனி படையிடம் கைதாகி இருக்கலாம். அல்லது கொலையுண்டிருக்க வேண்டும்.
புரூட்டஸ் : - கொலைதான் நமது குழூஉக்குறி! அதுதான் நாகரிகமான காரியம்! கவனி கிளைட்டஸ்!
அது என்ன குழூஉக்குறி ?
இது இயற்கை அளபெடை சொல் என்கிறது நன்னூல் இலக்கணம் . இதனை குழூக்குறி என்று எழுதினால் பொருள் தராது.
ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் 'கதைகளின் கதை - குழூஉக்குறி ' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இதில் அவர் பல தொழிற்சார்ந்த குழூஉக்குறிகளைக் குறிப்பிட்டிருந்தார். உதாரணமாக, ஜவுளித்தொழிலில் - மதி, வினை, குணம், சுருதி, சரம்,மதம்.,..இவையாவும் விலை பட்டியல். சந்தை, திருட்டுக்கும்பல், தீவிரவாதிகள், உளவுத்துறை,..என பல துறைகள் இவ்வகைச் சொல்லை நம்பியே இயங்குகின்றன.
பசி.பரமசிவம் , ஜோதிடத்தில் குழூஉக்குறி பயன்படுகிறது என்கிறார். லக் சூ ரா உச் கே நீச். இதன்படி ஜாதகக்காரரின் அப்பா, அம்மா, தாத்தா உயிருடன் இருக்கிறார்கள். பாட்டி இறந்துவிட்டார்.
இந்தியா - பாகிஸ்தான் போரின் போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எழுதிய குழூஉக்குறி, ரஷ்யா உளவுத்துறையிடம் சிக்க இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்தது. இராணுவத்தில் தினமொரு குழூஉக்குறி பயன்படுத்தப்படுகிறது. தன் முன்னால் ஒரு நிற்கும் நபர் சக வீரனா, தீவிரவாதியா எனக்காட்டிக்கொடுப்பது இதுதான்.
அமெரிக்கா - வியட்நாம் போரில் அமெரிக்க பயன்படுத்திய குழூஉக்குறி BOHICA ( Bend Over, Here It Comes Again) பிரபலமானது.
சித்தர்கள் மூலிகை வைத்தியத்தில் குழூஉக்குறியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆனைக்கன்று - அத்திப்பிஞ்சு; மறையன் விரோதி - கோவைப் பிஞ்சு; கானக் குதிரை - மாமரம்; காலில் பொடி - செருப்படி; தாயைக் கொன்றான் - வாழைப்பூ; வடுகு - சீதபேதி; தமிழ் - ரத்த பேதி . ஒரு பாடலின் குறிப்பு இது.
குழூஉக்குறி - ஒரு வகை வட்டார வழக்கு. (மங்கலம், இடக்கரடக்கல், குழூஉக்குறி )
ஆங்கிலத்தில் Argot , மறைமொழி. சங்கேதம் என்றும் சொல்லலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக