அணையாடை
இந்திய-ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இயக்கிய PERIOD - end of sentence என்கிற இந்திய குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட PAD MAN பாலிவுட் திரைப்படம் வட இந்தியாவில் பரவலான கவனிப்பைப் பெற்றது. இப்படம் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து மேலும் குறைந்த விலையில் நாப்கின் தயாரிப்பதைச் சேவையாகக் கொண்டிருக்கும் கோவை அருணாச்சலம் முருகானந்தத்தைக் கௌரவிக்கும் பொருட்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆஸ்கர் விருது பெற்ற PERIOD படமும் அவரது வாழ்க்கையையொட்டி எடுக்கப்பட்ட குறும்படமுமே.
பிரீயட் என்பது என்ன, பள்ளியில் மணி அடிக்கத் துவங்குவதா? பிரீயட் என்பது மாத விலக்கு. அதாவது, வாயு வெளியேற்றம் போல் உதிர வெளியேற்றம்( அகத்தியர் மருத்துவம் ).
மாத விலக்கு காலத்தில் வெளியாகும் உதிரத்தை பட்டினத்தார் 'சுரோணிதம்' என்கிறார். 'சுக்கில சுரோணிதங்களாலே உடம்புகொண்டு' என்கிறது சிலப்பதிகாரம்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நவமி, மாதவிலக்கு குறித்து எழுதிய ஒரு கவிதையால் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் எழுதியக் கவிதை, 'கோவிலுக்கு வெளியே/
ஒரு கூடாரம் கட்டுங்கள்/
அம்மன்/
மாதவிலக்கில்/
அங்கே தனியே இருக்கட்டும்’
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பருவப் பெண்களையும் அனுமதித்தல் பிரச்சனையாக எழுகையில் புதிய தலைமுறை விவாத நெறியாளர், கவிஞர் பொன்ராஜ் எழுதிய '.....எந்த மூன்று நாட்களில் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள் இருப்பதில்லை கொஞ்சம் சொல்லுங்களேன்' என்கிற கவிதைச் சுட்டிக்காட்டித் துவங்க, நிகழ்ச்சி களேபரமானது. இந்த விவாதத்தையொட்டி , அசாம் மாநிலம் - கௌஹாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ள 'காமாக்யா' சக்தி பீடத்தில் குறிப்பிட்ட மூன்று நாட்களில் அம்மனை நீராட்டும் நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கி ரத்தம் வழிவது போலச் செய்வது தெரிய வந்தது.
கவிஞர் கே. பாக்யாவின் துயரம் துடைக்க ஒரு நாப்கின் போதும் - என்கிற கவிதையில் இப்படியாக ஒரு வரி ' ஒரு சர்க்கஸ்காரியின் மாதவிடாய் காலத்தை கொண்டாட்டத்துடன் தொடங்கி வைக்கிறது நாப்கின் '.
மாதவிடாய் ( இது ஆண்களுக்கான பெண்களின் படம்) - கீதா இளங்கோவன் இயக்கியது. இப்படம், மாதவிடாய் காலத்தின் போது வெளியேறும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் ,78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை; மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்திகளைத் தருகிறது.
மாதவிலக்கு காலங்களில் பயன்படுத்தப்படும் pad தான் நாப்கின். இதற்கு முன்பு துணிகளையே பயன்படுத்தினார்கள். இத்துணிக்கு தூமைத்துணி ( தூய்மை என்கிற சொல்லின் திரிபு ), தீட்டுத்துணி, விலக்குத்துணி, கடுதாசி , தூரத்துணி, மூன்றாம் துணி, வெளித்துணி , வெளிக்குத்துணி, சுரோணத்துணி, சிவப்புத்துணி, சேணைத்துணி
என பலவாக அழைக்கப்பட்டது.
நாப்கினுடன் தொடர்புடையச் சொற்களாவன ஃப்ரீடம், ஸ்டேஃப்ரீ, விஸ்பர். Wisper என்கிற விளம்பரம் சர்ச்சையில் வந்து முடிந்தது. பெண் ஒருவர் இஸ்லாம் கறுப்பு பர்தா அணிந்து நடித்ததே அதற்குக் காரணம்.
துணிகளுக்குப் பதிலாக இன்று ' நாப்கின் ' பயன்படுத்தப்படுகிறது. அது என்னது நாப்கின்...?
நாப்கின் என்பது உடையா, ஆடையா - cloth or dress ?
எல்லா ஆடையும் உடையே. ஆனால் எல்லா உடையும் ஆடை ஆகாது. வேட்டி என்பது உடை. துண்டு ( குட்டை ) , சட்டை என்பவை ஆடைகள்.
நாப்கின் என்கிற சொல் நாப்பே ( nappe ) என்கிற பிரெஞ்ச் சொல்லுடன் - kin என்கிற சொல் இணைந்து உருவானதாகும். Nappe - மேசை விரிப்புத் துணி. Kin - மிகச் சிறியது. Kith and kin - உற்றாரும் உறவினரும். Kin என்பதற்கு மிக நெருக்கமான என்றொரு பொருளுண்டு. இதன்படி , நாப்கினை மிகச்சிறிய ஆடை அல்லது மிக நெருக்கமான ஆடை எனப் பொருள் கொள்ளலாம்.
Napkin - அமெரிக்க ஆங்கிலச் சொல். இதற்கு நிகரான பிரிட்டிஷ் சொல் serviette - குட்டை. இச்சொல்லுக்கு நிகரானச் சொற்கள் diaper,bib , doily , napery,
kerchief - கைக்குட்டை
Loincloth - அரைக்குட்டை ( கோமணம்)
Napkin - துடைப்பக்குட்டை அதாவது, துடைக்கும் துணி.
ஒரு மடமாது ஒருவனுமாகி,... என்கிற பட்டினத்தார் பாடலில் ' உதரம் அகன்று, புவியில் விழுந்து, யோகமும் வாரமும் நாளும் அறிந்து, மகளிர்கள் சேணை தர, அணையாடை மண்பட உந்தி உதைந்து, கவிழ்ந்து,...' என்பதாக அப்பாடல் நீளும் . சேணை ( தூரத்து ) காலத்தில் மகளிர் பயன்படுத்துவது அணையாடை என்கிறார் பட்டினத்தார்.
இதிலிருந்து நாமொரு முடிவுக்கு வரலாம், napkin என்பது அணையாடை.

கருத்துகள்
கருத்துரையிடுக