குஞ்சரம்

திசம்பர் மாத காக்கைச்சிறகினிலே இதழில் ' ஊர்சுற்றிக் காக்கையாரின் குஞ்சரங்கள்' - பேரா.ந.சண்முகரட்ணம்  எழுதி முகுந்தன் தொகுத்த பத்திக் கட்டுரை. நோர்வே , கலாச்சார மையத்தில் 'ஞானரதம்'( பாரதியார் எழுதியது ) கவிதையின் நாட்டிய அஞ்சலி நடந்தேறியது. 



பரம ஏழையாக இருப்பதால் உயர்ந்த இன்பங்கள் எதையும் பெற முடியவில்லையே, என வருந்தும் பாரதிக்கு ஈசன் ஞானம் என்கிற தேய்வீக ரதம் கிடைக்கிறது. அதைக்கொண்டு உபசாந்திலோகம், கந்தர்வலோகம், சத்தியலோகம், தர்மலோகம் சென்று பார்க்கிறான். நான்கு லோகத்திலும் கந்தர்வலோகம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அங்கு பர்வதகுமாரி என்கிற கந்தர்வ அழிகையைக் காணுகிறான். அந்த அழகியின் அழகில் சொக்கி,அவளுடன் பரவசத்தில் இருக்கும் கணத்தில் 'படேர்' என்ற ஒரு சத்தத்தினால் மூர்ச்சை போட்டு விழுந்தவன் கண் விழித்தபோது மீண்டும் பழையபடி தன் ஏழ்மை வீட்டில் இருப்பதை உணர்கிறான். இது ஞானரதத்தின் கதை. இக்கதைக் குறித்த விமர்சன போக்குடன், இன்னும் நான்கு பதிவுகள் கொண்ட பத்தி எழுத்திற்கு அவர் சூட்டியத் தலைப்பு ' குஞ்சரம் '. 

அது என்ன குஞ்சரம்..?

விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் குஞ்சரம் என்றொரு  ஊராட்சி இருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சி துவக்கம், ஞாயிறு தோறும் ஒளிப்பரப்பாகும் ஒரு நடன நிகழ்ச்சிக்கு 'மானாட , மயிலாட' என கலைஞர் பெயர்ச்சூட்டினார். சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய நடராஜப்பத்து என்கிற பதிகத்திலிருந்து எடுத்தாளப்பட்ட வரி இது. 'மானாட மழுவாட மதியாட புனலாட' என்பதாகத் துவங்கும் இந்த பாடலில் குஞ்சர முகத்தனாட,... என்பதாக ஒரு வரி உண்டு. 

2015 ஆம் ஆண்டு இலங்கை இறுதிக்கட்டப் போரில் நடந்தேறிய அத்துமீறல்களை  ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசுடன் இணைந்து விசாரித்து மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது.  இந்த அறிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் பல அறிக்கைகள் வெளிவந்தன. இதற்கிடையில் தமிழ் மிர்ரர் என்கிற பத்திரிகையில் ' இறக்கை இல்லாத அறிக்கை' என்கிற தலைப்பில்  ப. தெய்வீகன் ஓர் அறிக்கை வெளியிட்டார். '.....இந்த அறிக்கைக்கு அரிதாரம் பூசி குஞ்சரம் கட்டி அழகு பார்க்கும் தமிழர் தரப்புக்கள் தாம் எதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரியாமலேயே தமது ஆதரவு அறிக்கைகளை ஊடகங்களில் விளாசி வருகின்றனர்'. 

விளக்குமாற்றுக்கு  குஞ்சரம் கட்டுவதைப் போல - ஒரு பழமொழி. இங்கு குஞ்சரம் என்பது சுருக்குப்பையில், சிகை அலங்காரத்தில் தொங்கும் உருண்டையான அணிகலன் அதாவது கருப்புக்குழல்.

குஞ்சி  அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்... ( நாலடியார் )இங்கு குஞ்சி என்பது தலை முடி.

உச்சி முச்சிக் குஞ்சி - மீனாட்சி பிள்ளைத் தமிழ்

குஞ்சி ஆண்மயிர் - சூடாமணி நிகண்டு.

குஞ்சம் -  ஆண் உறுப்பை மறைக்கப் பயன்படும் பண்டைய காலத் துணி. இதிலிருந்தே ஆணின் உறுப்பு குஞ்சு என்றானது. 

சரி, முகுந்தன் குறிப்பிடும் குஞ்சரம் இதுதானா?

கவி குஞ்சர பாரதியார் என்றொரு கருநாடக இசைக்கலைஞர் இருந்தார். அவரது இயற்பெயர் கோடீஸ்வரன். சிவகங்கை மன்னர் அவரது இசைப்புலமையைப் பாராட்டி 'கவி குஞ்சரம் ' என்றொரு பட்டத்தைச் சூட்டினார். அதன்பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது.

பாலகுமாரன் எழுதிய' உடையார்' சரித்திர நாவலில் குஞ்சர மன்னன் என்றொரு  கதாப்பாத்திரம். இராசராச சோழன் இப்பெயரால் குறிக்கப்படுகிறார்.

குஞ்சரவொழுகை பூட்டி ( பதிற்றுப்பத்து).

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை ( தொல்காப்பியம்).

மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா ' - இன்னா நாற்பது.

 யானையை சங்க இலக்கியங்கள் அறுபது பெயரில் குறிப்பிடுகின்றன. அதிலொன்று குஞ்சரம். 

இங்கு குஞ்சரம் என்பது வளைந்து தொங்கும் தும்பிக்கை உடைய விலங்கு. 

சிவபெருமான், நடனமாடுகையில்  இடது பாதத்தை தூக்கி வளைத்து ஆடியதால் அது குஞ்சிதபாதம் என அழைக்கப்படுகிறது. 

குஞ்சரம்,  இந்திய அனைத்து மொழியிலும் புழக்கத்திலுள்ள ஒரு சொல் என்கிறார் நா.கணேசன். இவரது சொல்லாய்வின் படி, மஞ்ஞை - மஞ்சை ( மயில்) எனத் திரிந்ததைப் போல குன்று போலிருக்கும் யானை குஞ்ஞரம். இச்சொல்   குஞ்ஞு - குஞ்சு - குஞ்சர- குஞ்சரம் என திரிந்தது என்கிறார்.

குஞ்சரம் வடமொழிச்சொல்லாகத் தெரிகிறது. இதன் வேர்ச்சொல் குஞ்ஞு தமிழ்ச்சொல்.

இதன்படி,  குஞ்சரம் என்பது களபம். ஆனை என்றும் களிறு என்றும் பிடி என்றும் சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்