காலதர்

மனத்தின் தோற்றம் - பேரா.சுந்தர சண்முகனார் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் 'தொழுது பேசுதல்' என்றொரு தலைப்பு.  அதற்கு மணிமேகலை காப்பியத்திலிருந்து ஒரு சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார். எட்டி குமரன் என்பவன் யாழ் வாசிக்கிறான்.  அவன் வாசிக்கும் யாழின் சுதி மாறுகிறது. ஏன் மாறுகிறது, என உதயக்குமாரன் கேட்க , எட்டிகுமரன் உதயக்குமாரனைத்  தொழுது வணங்கிவிட்டு சொல்கிறான். ' மணிமேகலை நடந்து செல்வது காலதர் வழியில் தெரிந்தது. அவளைப் பார்த்ததும் சுதி மாறிவிட்டது'.

அம்மாவின் ரகசியம் - சுநேத்ரா ராஜகருணாநாயக, ஆங்கிலம், சிங்களம் இரு மொழிகளில் எழுதப்பட்ட குறுநாவல். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் எம்.ரிஷான் ஷெரிப்.   இந்நாவலின் களம் ஒரு சிற்றூர். அவ்வூரை சிங்கள இராணுவ படையினர் சுற்றி வளைக்கிறார்கள். அதற்குள்  ஒரு ஏழை சிங்களக் குடும்பமும் அடங்குகிறது. அப்படையினரிடம் அக்குடும்பம் படும்பாடுதான் கதை. கதையின் நாயகி முத்துலதா,  மனதிற்குள் நீண்ட நாள் வைத்திருந்த ஒரு ரகசியத்தை  கடைசியில் அவிழ்க்கிறாள். 

 இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னுரை தந்திருப்பவர் அம்பை. ' சுநேத்ராவின் படைப்புலகை எட்டிப்பார்க்க அமைந்த ஒரு காலதர்தான் இந்த மொழிப்பெயர்ப்பு. இதன்பின் அப்படைப்புலகின் பெருஞ்சன்னல்கள், கதவுகள் திறக்கப்படும் வாய்ப்புகள் உண்டு என்று கட்டியம் கூறும் மொழியாக்கக் காலதர் ..' என்பதாக ஓரிடம். 

அது என்ன, காலதர்...?.

இச்சொல்லை தமிழ்க்கவிதைகளில் நிறைய காண முடிகிறது. கவிஞர்கள், காதலர் என்பதை அவசரத்தில் காலதர் என மாற்றி எழுதிவிடும் சொல்லாக அது இருக்கிறது.

கவிஞர் மகுடேசுவரன், இச்சொல்லை பல இடங்களில் விரும்பி பயன்படுத்தியிருக்கிறார். இவர் எழுதித் தொகுத்த ஒரு கட்டுரை நூலின் தலைப்பு ' காலதர் '.

'மான்கள் காலதர் மாளிகை ' என்கிறது   சிலப்பதிகாரம். மானின் கண்களைப் போல வழிகள் கொண்ட மாளிகை என்பது அதன் பொருள்.

காலதர் அருகே காதலர் - என்கிறது ஒரு கவிதை. காலதர், ஒரு
எழுத்தாளரின் புனைப்பெயராகவும் கூட இருக்கிறது.

சரி, காலதர் என்பது என்ன...?

அகநானூறில் கானமானதர் என்றொரு சொல் உண்டு.  காட்டு விலங்குகள் செல்லும் வழி என்று அதற்குப் பொருள். இதேப்போன்று, கல்லதர் - கல்லினாலான வழி.

ஆக்கம் அதர் வினாய்  என்கிறது  ஒரு குறள்.

கால் என்பதற்கு செல்லுதல், ஓர் உறுப்பு, காலம், காற்று என பல பொருள் உண்டு. 

இங்கு ,
காலதர் என்பதை கால் ( காற்று ),  அதர் ( வழி )  எனப் பிரித்து பொருள் கொள்ளலாம். அதாவது காற்று வரும் வழி.

ஆர்.சி.சம்பத்,  தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் என்கிற நூலில் போர்த்துகீசியர்கள் வருகைக்கு முன்பு வரைக்கும்  இச்சொல் புழக்கத்திலிருந்தாகச் சொல்கிறார்.

இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் சாளரம், சாலேகம்,ஜன்னல் என பல பொருள் தருகின்றன.

ரா.பி.சேதுப்பிள்ளை 'தமிழ்விருந்து' என்கிற நூலில் ஜன்னல் என்பது போர்த்துகீசிய சொல் என்கிறார்.

கணினி உலகிற்கு, 2014 சூலை 29, மிக முக்கியமான நாள். அன்றைய தினம்தான் விண்டோசு 7,8,8.1 ஆகிய மென்பொருளுக்கு மாற்றாக விண்டோசு 10 அறிமுகம் செய்யப்பட்டது.  இதை இணையத்தமிழ் 'காலதர் 10 ' என தமிழ்படுத்தியது. 

இதிலிருந்து நாமொரு முடிவிற்கு வரலாம். இனி ஜன்னல், சன்னல், விண்டோ, சாளரம் என்பதை காலதர் எனச் சொல்லிப் பழகலாம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்