காந்தர்வம்

திருமண வயது - ஆண்களுக்கு அநியாயம் நடக்கிறதா?  யுவகிருஷ்ணா எழுதிய ஒரு கட்டுரை. ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க முடியாது உச்சநீதி மன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவை மையமாகக் கொண்ட  கட்டுரை இது.

1927 ஆம் ஆண்டு ராய்சாகிப் ஹர்பிலாஸ் சர்தா, குழந்தைத் திருமணத் தடுப்பு மசோதாவை பிரிட்டிஷ் இந்திய மத்திய சட்டமன்றத்தில் முன் வைத்தார். அதன்படி பெண்ணுக்கு திருமண வயது 14,ஆணுக்கு 18. இதுவே பிறகு 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் மூலம் 18 மற்றும் 21 என்றானது.

இக்கட்டுரையில் இப்படியாக ஓரிடம், காதல், கத்தரிக்காய், காந்தர்வ விவாகம் போன்ற அடாத செயல்பாடுகளால் குடும்ப மானம் என்கிற வேலியைக் காக்கும் பொருட்டு  குழந்தைத் திருமணங்கள் நடந்தேறின.

அது என்னதாம் காந்தர்வம்?

திருத்தக்கத்தேவர் இயற்றிய  சீவகசிந்தாமணி  13 இலம்பகங்களாலானது. இலம்பகம் என்பதற்கு மாலை என்று பொருள். பதின்மூன்றில் ஒன்று காந்தருவதத்தையார் இலம்பகம்.

சாவி எழுதிய ஆப்பிள் பசி என்கிற நாவலில் இச்சொல் இடம் பெறுகிறது. டெல்லி தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் காந்தர்வ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

பாரதி இயற்றிய ஞானரதத்தில் ' காந்தர்வ பாஷை ' என்பதாக ஓரிடம் வருகிறது.    கும்ப ராசி, தனுசு நட்சத்திரத்தை காந்தர்வம் என்கிறது ஜோதிடம்.

காந்தர்வம் என்பது வேதச்சொல். நான்கு வகை வேதங்களில் சாம வேதத்தின் உபவேதம் காந்தர்வம். அதாவது நுண் கலைகள் குறித்த அறிவியல்.

பெருஞ்சித்திரனார் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரை - எட்டுவகை திருமணங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறது. அதில் ஒன்று காந்தர்வம். இதையே ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணியும் பட்டியலிடுகிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல் புரிந்து, மணம் செய்து கொள்வது. 

பிலிகணீயம் என்கிற வட நூலினைத் தழுவி பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிக்கவி என்றொரு இலக்கியம் படைத்தார். பிறகு அதுவே அவருக்கு புரட்சிக்கவிஞர் என அடைமொழிக்கு காரணமும் ஆனது. இதில் அமுதவல்லி என்கிற அரசனின் மகளுக்கு, உதாரன் என்கிற  இளைஞன் மீது  காதல் வர, இருவரும்  காந்தர்வ மணம் புரிய போராடுகிறார்கள். அரசனின் மகளை ஒரு சாமானியன் மணம் முடிப்பதா..? அவனுக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதனால் மக்களிடம் புரட்சி வெடிக்க மன்னராட்சி , மக்களாட்சியாக மலர்கிறது.  தமிழ்நாட்டில் சங்கர், இளவரசன்கள் படுகொலை செய்யப்பட காரணம் காந்தர்வமே. ஆனால் புரட்சியைத்தான் காணோம்.

காந்த துருவம் எதிர் துருவத்தை கவர்ந்திழுப்பதைப் போல இரு பாலினங்கள்  ஒன்றையொன்று கவர்ந்துகொள்வது காந்தர்வம்.
காந்தர்வ திருமணத்தை பெரியார் , சாதி மறுப்புத்   திருமணமாக நடத்தி வைத்தார்.

காந்தர்வம் குறித்து சங்கப்பாடல்களில் தேடுகையில்  அகப்பாடல்கள் களவு, களவொழுக்கம் என்கின்றன. இனி நாம் அப்படியே சொல்லலாமே....?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்