அபரஞ்சி

கமல்ஹாசன் , சினிமாவில் 60 ஆவது ஆண்டை தொடுவதை முன்னிட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் வடிவேலு, 'பரமக்குடி தந்த பத்தரைமாத்துத் தங்கம் கமல்' எனப் பேசினார்.


மாற்று என்பதே மாத்து என்பதாக திரிந்துள்ளது. சரி, பத்தரை என்பது என்ன?

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி. குண்டலம் என்றால் சுருள் என்று பொருள். கேசி - முடி. இந்த காப்பிய நாயகியின் பெயர் பத்தரை.

பத்தரை, பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு பெயர்.  இதன் பொருள், அனைத்தையும் உணர்ந்தவள் ( லியோ தமிழ் அகராதி).

பத்தரை - பொன்னுடன் தொடர்புடைய ஒரு சொல்.

கணக்கதிகாரம் பொன்னை அளக்கும் அளவுகளை வெண்பாவாக பாடியுள்ளது. இதன்படி, 1பிளவு = 2 நெல் / 1 குன்றிமணி= 2 பிளவு / 1 மஞ்சாடி= 2 குன்றிமணி / 1 பணம்= 2 மஞ்சாடி /1 கழஞ்சு= 10 பணம்/ 1 கஃசு= 2 கழஞ்சு /1 வராகன்= 12 கழஞ்சு /1 ஓஞ்சை= 9 வராகன் /1 சேர்= 9 ஓஞ்சை /1 பவுன்= 12 ஓஞ்சை.

ஒரு சவரன் பொன் என்பது தோராயமாக 8 கிராம். சரியாக 7.9881 கிராம். இதில் தூய பொன் என்பது 7.3 கிராம். பொன், கேரட் என்கிற அளவால் அளக்கப்படுகிறது. இந்த அளவை, தமிழ் அளவையில் கழஞ்சு அளவைக்கு நிகரானது.

தங்க ஆபரணம் 8,9,10,12,14,18,22 காரட் ( கழஞ்சு) களில் தயாரிக்கப்படுகிறது. 22 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் மற்றும் ஜின்க் என மூன்று உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன.

பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் பத்து பங்கு தங்கத்தில் 1/2 பங்கு செம்பு கலந்த பொன். அதாவது அரை பங்கு அளவிற்கு மாற்றுப் பொருள் கொண்ட பொன். இந்த அரை பங்கு அளவும் கலப்பு கலக்காத தங்கத்திற்கு ' பத்துமாற்றுத் தங்கம் ' என்று பெயர். இத்தங்கம் குறித்து தாயுமானவர் பாடியுள்ளார்.
'கருமருவு குகையனைய காயத்தின் ' என்ற பாடலில், 'பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட பட்சத்தை என்சொல்லுவேன்'

இதே தங்கத்தை உவமையாகக் கொண்டு பாரதியார் , கண்ணன் பாட்டு பாடியுள்ளார். 'பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்'.

பத்தரை மாற்று என்பது உலோகம் கலந்தது. பத்துமாற்று, உலோகம் கலக்காத தூய தங்கம். (தூய - சொக்கம்). இதனைச் சொக்கத்தங்கம் என்றும் சொல்லலாம்.

பத்தரை மாத்து தங்கம் - 99.5 டச்சு ( 22 கழஞ்சு ). பத்து மாற்றுத்தங்கம் ( 24 கழஞ்சு ) - 100 டச்சு.

இதைவிடவும் உயர்ந்த தங்கம் உண்டு. அது, ஆயிரத்தெட்டு மாற்றால் ஆன  தங்கம். இதற்கு, 'அபரஞ்சிப் பொன் ' என்று பெயர்.  அபரஞ்சி - 1000 டச்சு கொண்டது.

வைகை ஆற்றில் இறங்கும் அழகர் கோவில் சுந்தரராஜப் பெருமாள் சிலை அபரஞ்சிப் பொன்னால் செய்யப்பட்டது. இதைப் போன்று, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சிலையும் இதே பொன்னால் ஆனதே. உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் இவை  இரண்டும்தான். ( மாலை மலர் செய்தி).

அபரஞ்சிப் பூஷணம் என்பதற்கு புடமிடப்பட்ட பொன் என்பதாக நவீன தமிழ்ச்சொல் அகராதி பொருள் தருகின்றது.

அபரஞ்சி குறித்து செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மூன்று விளக்கம் தந்துள்ளது.

அபரஞ்சி - புடமிட்ட பொன் ( Refined gold ). ஆயினத்தெட்டு மாற்றி னபரஞ்சி

அபரஞ்சி - தங்க ஒள்ளிழை ( Gold leaf used in setting precious stones ); கம்மாறு வெற்றிலை - a species of dark greened pungent thick netel leaf.

அபரஞ்சித்தூள் - தங்கப்பொடி gold dust, பொன் மணல் gold ore.

திருக்குற்றாலக் குறவஞ்சி,  அபரஞ்சி தங்கத்தை  குறவஞ்சியின் மேனிக்கு உவமையாகப் பாடியுள்ளது. ' வஞ்சி எழில்அபரஞ்சி வரிவிழிநஞ்சி'. இதற்கு உரை எழுதிய புலியூர்க் கேசியன், அபரஞ்சி என்பதை வார்த்துவிட்ட பொன் என்கிறார். இதை உறை தங்கம் என்று சொல்லலாம்




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்