புல் - பெரிதினும் பெரிதுகாண்


தமிழறிஞரும் முதுமுனைவருமான இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர், நூலாசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தமிழுக்காக தான் வாழ்ந்த பெருவாழ்வை, அவராற்றிய அளப்பெரியத் தொண்டினை ‘ ஒரு புல் ’ என்கிற தலைப்பில் தன் வரலாற்றாக்கம் செய்திருக்கிறார் இரா.இளங்குமரன். ஓர் அறிஞரின் பெருவாழ்வு எங்ஙனம் ஒரு புல் என்றாகும்...?
       மகாகவி பாரதி பார்வையில் புல் என்பது சின்னஞ்சிறிய, அற்பமான ஓருயிரி. ' காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்'. என மரணத் தூதுவன் காலனை ‘புல்’ என்கிறார் மகாகவி பாரதி.
                புல்லுருவி, என்றொரு சொல் தமிழில் உண்டு. இடையூறன், தீயவன், கயவன், தீங்கன், பதறன்,...இவர்களைக் குறித்துக் காட்டும் உருவகச் சொல் இது. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்கிற சிறுகதையில், புதுமைப்பித்தன்கல்லுருவி புல்லுருவி’ என்கிற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். புல்லுருவி என்பது தனிப்பட்ட ஒரு  தாவரத்தைக் குறிக்கும் சொல் அல்ல. புல்லைப் போல ஊடுருவி வளர்வதால் அதற்கு அப்படியொரு பெயர். எந்த மரத்தின் மீது ஒட்டுண்ணியாக வளர்கிறதோ, அந்த மரத்தின் தகவமைப்பைப் பெற்று வளரக்கூடியது. இதை ஊடுருவி என்றே சொல்லலாம். ஏன் புல்லுருவி என்கிறோம்? புல் என்றால் தழுவுதல் என்று பொருள். ‘புல்லிப் புணர்வது என்றுகொல்லோ என்பொல்லா மணியைப் புணர்ந்தே’ (திருவாசகம்) மாணிக்கவாசகர். ‘புல்லிக் கிடந்தேன்’ என்கிறது இன்பத்துப்பால் வள்ளுவம். காதலன், காதலி ஒருவரையொருவர் மறந்து தழுவிக் கிடத்தலே புல்லிக் கிடத்தல்.
                ' அடேய், நீயொரு புல்லடா’ என்பாருண்டு. இங்கு புல் என்பது கீழ்நிலை. புல்லின் உருவம், பயன்பாடு, அதன் ஆயுட்காலம் இவற்றை மனதிற்கொண்டு சொல்லப்படும் ஒரு வசவுச் சொல். என் அறிவுக்கு முன்னால் நீயோ வெறும் ஓரறிவு என்பது இச்சொல் கொண்டிருக்கும் காரம். ' புல்லும் மரனும் ஓரறி வினவே ' என்கிறது தொல்காப்பியம்.
       நெல் என்பதே புல் இனம்தான். நெல் என்பதனின் எதிர்ப்பதமாகப் புல்லைச் சொல்கிறோம். நெல் , நல்லாருக்கான உருவகம். புல் என்பது தீயவர். 'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் ' என்கிறார் ஔவையார். புல்லான் , வழிப்பறிக் கொள்ளையனைக் குறிக்கும் ஒரு சொல். புல்லாள், இதன் நிகர்ச் சொல்.
                'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை / மறுமையும் புல்லாளே ஆயமகள் ' என்கிறது கலித்தொகைஅதாவது, காளை அடக்க அஞ்சும் வாலிபனை கனவிலும் தழுவமாட்டாளாம் ஆயமகள். காளைக்கு அஞ்சுபவன், கீழ்நிலையானவன். இத்தகையப் புல்லை, தான் வாழ்ந்ததற்கான அடையாளமாக, தடமாக, சுவடாக 'ஒரு புல்' எனக் காட்டிக்கொள்கிறார் இரா.இளங்குமரன்.
       புல் என்பது ஓரறிவு, சிறியது, பதர், புதர்களை  இவ்வளவுதானா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது சொலவடை. ஹோமர் படைத்த இலியட் புராணக் கதையின்படி, மெனிலாஸ் மீது அம்பு. வேல், சூல் என எந்தவொரு ஆயுதம் பாய்ந்தாலும் அது பூவாக, சருகாக, இலையாக மாறிவிடும். காரணம், அவன் குழந்தையாக இருக்கையில் அவன் குளித்த மந்திரக் குளியல். அவனது குளியலில், கால் கட்டை விரலிடத்தில், ஒரு புள்ளி அளவிற்கு நனையாது இருந்துவிடுகிறது. இந்த இரகசியத்தை அறிந்த பாரிஸ், ஒரு புல் கொண்டு எய்தி, மெனிலாஸை வீழ்த்திவிடுகிறான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், என்கிற பழமொழி இந்தக் கதையிலிருந்து பிறந்திருக்கக் கூடும்.
       புல்லுதல் என்றால் தழுவிக் கிடத்தல். மகுடாபிஷேகம் முடிந்து ஒவ்வொருவராக விடைபெறுகின்றனர். கடைசியாக ஓர் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் அனுமன். அவனை அருகில் அழைத்த ராமன், ‘ உனக்கு நான் எப்படித்தான் நன்றி கூறிவிட முடியும்?’ என்று உணர்ச்சிப்பொங்கக் கூறிவிட்டுப் பணிக்கிறான். ‘ பொருந்துறப் புல்லுக’
இலைப்புல், உப்புப்புல், ஒட்டங்காய்ப்புல், நச்சுப்புல், பன்றிப்புல், நெருஞ்சிப்புல்,.. இவையாவும் தரையோடு தரையாகத் தழுவிக் கிடப்பவை. சில புற்கள் நிமிரவும் செய்யும். அவை கோரை, தண்டாங்கோரை, கம்புப் புல்.  சில புற்கள் மேலும் நிமிரும். நாணல், மூங்கில், கரும்பு, வாழை. சில புல் புல்லிக்கிடவாமல் காற்றில், தண்ணீரில், ஒட்டுண்ணியாக புவியெங்கும் பரவச் செய்யும். உதாரணம் ஒட்டுப்புல், ஊகம், குஞ்சம், நெருஞ்சி.
       அறுகம் புல் அறுகுபோல் ஊன்றுவது. வழிபாட்டிற்கு உகந்த புல் இது. அறுகம் புல்லை வேரொடுப் பிடுங்கி, ஒரு பிடி மண்ணை கொலுக்கட்டைப்போல பிடித்து அதன் மீது அறுகை நட்டு வழிபாடு செய்வது நம் மூதாதையரின் வழக்கம். அதாவது அறுகுபோல தழைத்தோங்க வேண்டும் என மணத்தம்பதிகளை வாழ்த்துவர். இதிலிருந்து தோன்றியதே, சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அறுகை நடல்.
       இவ்வளவு மட்டும் தானா? புல் ஏடு ஆகிறது, பறவைக்குக் கூடும், புழு பூச்சிகளுக்கு வீடும் ஆகிறது. கொங்காணி, கொட்டான், பெட்டி, பேழை, முறம், துடைப்பம் ஆகிறது. ஆடு, மாடு, முயல், குதிரைகளுக்கு உணவாகிறது. புல்லாங்குழல் என்பதே ஒரு புல் தானே. தன்னைத் தானே இப்புவியெங்கும் பரப்பிக்கொண்டு, பேரிடரிலும் அழியாது தற்காத்துக் கொள்வது புல். ஆகவேதான், தமிழுக்காகத் தான் வாழ்ந்த வாழ்வை 'ஒரு புல்' என்கிறார் இரா.இளங்குமரனார்.



                                                                                                                17.05.2020 தினமணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை