முத்தவல்லி

பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோதம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி, மசூதி கட்ட ஐந்து ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. 

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் நீதி மன்றத்தில் தொடங்கியது இந்த அயோத்தி வழக்கு. இவ்வழக்கின் தோற்றுவாய் ஹாசிம் அன்சாரி, ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ். இருவரும் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தும் தங்கள் நட்பைத்  தொடர்ந்தனர். இருவரும் சிறுவயது முதல் அயோத்தி நகர தெருவில் ஓடி, ஆடி விளையாடியவர்கள். டிசம்பர் 23, 1949 இல் நள்ளிரவில் பாபர் மசூதினினுள் ராமர் சிலை வைக்கப்பட்டபின் பைஸாபாத் நீதிமன்றத்தில் இருவரும் ஒன்றாக கிளம்பிச் சென்று வழக்குத் தொடுத்தனர். 2003 இல், பரமஹன்ஸ் மறைந்த போது, அவரது உடல் முன் மறுநாள் காரியம் நடைபெறும் வரை இரவிலும் கண்விழித்து அமர்ந்திருக்கிறார் ஹாசிம் அன்சாரி. இறுதி தீர்ப்பு வருகையில் இருவரும் உயிருடன் இல்லை. 

ஹாசிம் அன்சாரி, பாபர் மசூதியின் கடைசி முத்தவல்லி என்கிறது -தி இந்து நாளிதழ். சரி,முத்தவல்லி என்பது என்ன? 

முத்தவல்லி , வக்ஃப் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு  சொல்.

இந்தியாவில் வக்ஃப் செல்லுபடியாகும் சட்டம் 1913 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. வாரிசு அற்றவர்களின் சொத்துகள் என்பதைக் கருத்தில் கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் 1954 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில்  இயற்றப்பட்ட முத்தவல்லிகள் கடமையுடன் கூடிய வக்ஃப் சட்டத்தில்  பிரிவு -36 சேர்க்கப்பட்டது.

முத்தவல்லி, வக்ஃப், வஸிய்யு, வாகிஃப், ஸலாத், ஸவ்ம் ,மசூதி,...   இவை யாவும்  அரபிச் சொற்கள். 

ஸலாத் – தொழுகை, ஸவ்ம் – நோன்பு.
வக்ஃப் ( Waqf ) என்பதற்கு நிறுத்துதல் அல்லது நிலை நிறுத்துதல் என்று பொருள்.  அதாவது சொத்துகளை நிலை நிறுத்துதல். வக்ஃபிற்கு சொத்துகளை வழங்குபவர் வாகிஃப். வாகிஃப் ஒருவர்  வக்ஃப்பிற்கு சொத்துகளை வழங்கிவிட்டால், பிறகு அது அவருடைய சொத்து அல்ல. அச்சொத்துக்கு அறங்காவலராக அவரே இருக்கலாம் அல்லது  வேறொருவரை நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படுபவர் முத்தவல்லி. சில வக்ஃபு வாரியங்களுக்கு முத்தவல்லிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. 1956 ஆம் ஆண்டு தமிழக அரசு  வக்ஃப் வாரியம் அமைத்தது. இதன் முதல் தலைவர் எஸ்.கே.அகமது மீரான்.

கீரனூர் ஜாகீர் ராஜா எழுதிய மீன்காரத்தெரு நாவலில் ' முத்தவல்லி ' பாத்திரம் வருகிறது. நாவலில், நைனா என்றொரு பாத்திரம். அவன் , வள்ளி என்கிற இந்துப் பெண்ணைக் காதலித்து கருகமணி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறான். அவள் இறந்துபோகையில் அவளை, நைனாவின் மனைவியாக ஏற்க முத்தவல்லி மறுத்துவிடுகிறார். மீன்காரத் தெரு  மக்கள் வள்ளியை வள்ளிபீவி எனப் பெயர்ச்சூட்டி ஜியாரத் செய்கிறார்கள்.

ஜியாரத் -  உலகில் பிறந்து வாழ்ந்து மரணித்தவர்களுக்கும்  மரணிக்க இருக்கிற நமக்காகவும் பிரார்த்தனைச் (துஆ) செய்வதாகும். 

சஜ்தா – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதிய ஒரு சிறுகதை.  இஸ்லாமிய கலைச்சொற்கள் நிரம்பப்பெற்ற கதை இது.  தொழுகையின் போது விரல் ஆட்டக்கூடாது. அப்படியாக ஆட்டும் ஒருவனின் விரலை செட்டியார் சின்னாப்பா ஒடித்துவிட, ஜூம்மா தொழுகையில் பிரச்சனை வருகிறது. 'தொழாதவங்களப் பத்தி எந்தக் கவலயும் படாம ஒழுங்கா ஐவேளையும்  தொழுறவங்களப் பாத்து  அப்படித் தொழு இப்படித் தொழு.. தொப்பி போட வேண்டாம்..வெரல நீட்டாத.. ஆட்டு.. தொப்பி போட்டே ஆகணும். தொப்பியில்லாம பள்ளிக்குள்ள நொழையாதே.. எங்க பள்ளில வந்து வெரல ஆட்டாதேனு.. ஒரே அக்கப்போரு.. இப்ப'. பிரச்சனைக்குரியவர்களை முத்தவல்லி அனீபா ராவுத்தர் கண்டிக்கிறார்.

ஸஜ்தா என்பது நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது. 

இக்கதையில் பின்வருமாறு  சொல் விளக்கம் தந்திருக்கிறார். பித்னா – குழப்பம், சின்னாப்பா – சித்தப்பா, துஆ – பிரார்த்தனை , பரக்கத்து – சுபிட்சம், சுன்னத் – நன்மை , ஹராத் – கெட்டவழி , ஷிர்க் – இணைவைத்தல் , அத்தஹியாத் – தொழுகையில் இறுதி நிலை இருப்பு, கலிமா விரல் – ஆள்காட்டி விரல் , ஹதீஸ் – நபிவழி சொல்லும் செயலும், இமாம் – தொழுகையை வழி நடத்துபவர் , தக்வா – இறையச்சம் , குத்பா – தொழுகை உரை , ஸஜ்தா – தரையில் தலைவைத்து இறைவனை வணங்கும் நிலை, முத்தவல்லி – நாட்டாமை.

முத்துவல்லி, முத்தவல்லி இரண்டும் வேறு வேறு. முன்னது ஹிந்தி. பெயர்ச்சொல். பின்னது உருது.காரணப் பெயர்.
Muttawalli - Muta + Wali . Muta - Obey. Wali - Governor, Lord. இதற்கு இஸ்லாமிய அகராதி -  நாட்டாமை, வக்ஃப் அறங்காவலர், மசூதி பாதுகாவலர், வாரிய காவலர், சொத்துகளை நிர்வகிப்பவர் என்பதாகப் பொருள் தருகின்றது. இதிலிருந்து முத்தவல்லி என்பதற்கு மசூதியை நிர்வகிக்கும் தலைவன் என்று பொருள் கொள்ளலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்