அஞரின்பர்
திசம்பர் 16, சோனியா காந்தி , ராகுல்காந்தி கலந்துகொண்ட அண்ணா அறிவாலய கலைஞர் சிலை திறப்பு விழாவிற்குப் பிறகான பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் நரேந்திர மோடியை 'சேடிஸ்ட் ' பிரதமரென விமர்சனம் செய்தார். இச்சொல் குறித்து தினசரிகள் அவ்வளவாக கண்டுகொள்ளாமல் கடந்து போக முரசொலி இவ்வாறு தலைப்புச் செய்தியாக்கியிருந்தது. 'பரம்பரை மன்னர் போல் செயல்படும் 'சேடிஸ்ட்'மோடியின் நாசிச, பாசிச ஆட்சியை வீழ்த்தி புதிய இந்தியாவை உருவாக்க ராகுலே வருக!நல்லாட்சித் தருக!'.
இதே சொல்லை அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தின் மீதான அறிக்கையில் 'தமிழகத்தை ஒரு போராட்டக்களமாக மாற்றும் சேடிஸ்ட் மனப்பான்மையுடன் அதிமுக அரசு செயல்படுகிறது' என்றிருந்தார்.
தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு இதே சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஆந்திரப்பிரதேசம் நந்தியால் தொகுதி எம்.எல்.ஏ பூமா நாகிரெட்டி மரணமடைய அத்தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ‘ஆந்திரப்பிரதேச மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடுவை சுட்டுக் கொல்ல வேண்டும். அவர் கலியுக ராட்சசனாக இருந்து வருகிறார்’ என குறிப்பிட்டார். இது ஆந்திராவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு 'என்னை சுட்டுக் கொல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறிய கருத்துக்கள் அவரது ’சேடிஸ்ட்’ மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது' என்றிருந்தார்.(மாலைமலர் ஆகஸ்டு -8).
நடிகர் வடிவேலு ' எலி ' திரைப்படத்தின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தவர்களை ' சைக்கோ, சேடிஸ்ட் ' என்றார்.
ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் எழுதிய நாவலில் ஓரிடம் ' கடவுளே...நல்லவர்களை மட்டும் ஏன் இந்த சோதனை சோதிக்கிறாய்?' ' கடவுள் ஒரு சேடிஸ்ட்'.
சேடிஸ்ட் மன்னர்களென சிலரை வரலாறு பட்டியலிட்டுள்ளது.
அட்டியா, செங்கிஸ்கான், நேரோ, ட்ராகுலா, வ்லாடு டெபெஸ், நான்காம் இவான், கலிகுலா, மாக்ஸிமிலியன், இப்ராஹிம் சுல்தான், தாமஸ் டி டர்குவெமடா,...
சேடிஸ்ட் - நாசிஸ்ட், பாசிஸ்ட் இவ்விரு சொற்களை விடவும் கடுஞ்சொல் .
அது என்னது சேடிஸ்ட் ?
பிரெஞ்ச் சொல் SADISME என்கிற சொல்லிலிருந்து பிறந்தது SADISM - SADIST.
சேடிஸ்ட் குறித்து தமிழில் தேடுகையில்
சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம் - வரந்தரு காதையில்
'ஆற்றாத் தன்மையள் ஆரஞரெய்தி' என்கிறது. அதாவது, மாலதி என்கிற பெண், மாற்றாந்தாய் குழந்தைக்கு முலைப்பாலூட்ட அக்குழந்தை முந்தைய கருமத்தின் பயனாய் இறந்துவிட அதனால் ஏற்படும் துன்பம் என்பது பொருள்.
ஆரஞர் உற்றன் கண் ( குறள் 1179 )
பிரிந்துசென்ற காதலனுக்காக துஞ்சாத கண், அவன் வந்ததன் பிறகும் துஞ்சாது. இத்துன்பத்தை வள்ளுவன் 'ஆரஞர்' என்கிறான்.
தடித்தனன் அவனுந் தானும் ஆரஞர் உழந்து ( கந்த புராணம் )
'ஆரஞர் உற்ற வீரபத்தினி' ( சிலப்பதிகாரம் ) .
அஞர் - ஆரஞர் இரண்டும் துன்பத்தைக் குறிக்கும் சொற்கள். ஆரஞர் என்பது தான் வரவழைத்துக்கொள்ளும் துன்பம் . அஞர் என்பது அடுத்தவர் ஏற்படுத்தும் துன்பம்.
'ஆரவுண்டு பேரஞர் போக்கி ' - பொருநராற்றுப்படை.
'கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ' என்கிற நற்றிணை பாடலில் 'வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே' என்பது கடைசி வரி.
தலைவி மீது பல துன்பங்கள் படர அதிலிருந்து மீண்டெழும் தவிப்பு.
SADISM ( கொடுமகிழ்வு )இதன் நிகர்சொல் MASOCHISM அதாவது, வலியேற்பு வெறி, துன்பவேட்கை, தாக்கின்பம், வல்லுறவின்பம், சித்திரவதை செய்வதில் இன்பம்,...இத்தகைய துன்பத்தை கைக்கொட்டி ரசிக்கும் மனோபாவம் கொண்டவர்களே சேடிஸ்ட். தமிழில் சொல்வதாக இருந்தால் 'அஞரின்பர்'.

கருத்துகள்
கருத்துரையிடுக