துறக்கம்


24 ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு  'முகமது ரசூல்லா' திரைப்படத்தைத்  திரையிடும் பொருட்டு வந்திருந்த ஈரானிய திரைப்பட கலைஞர் மஜூத் மஜூதிவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், 'மிகக் கடுமையான தணிக்கை விதிகள் கொண்ட ஒரு  நாட்டிலிருந்து எப்படி உங்களால் மிகச் சிறந்த படங்களை வெளிக்கொணர முடிகிறது...?'. அதற்கு  அவர் சொன்னப் பதில்  ' தணிக்கைத் துறையினர், நிறைய சட்ட விதிகளையும் , கட்டுப்பாடுகளையும் தன் வசம் வைத்திருக்கிறார்கள். என் படைப்பிற்குள்ளாக நுழைந்து துருவிப் பார்க்கும்படியான  காட்சிகளை அவர்களுக்கு நான் கொடுப்பதில்லை...'.

உலக திரைப்பட கலைஞர்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவரது அடுத்தடுத்த இரு திரைப்படங்கள்- சில்ரன் ஆப் ஹெவன்,  த கலர் ஆப் பாரடைஸ். ஹெவன் , பாரடைஸ் இரண்டுமே சுவர்க்கம்தான், இரண்டிற்குமான வித்தியாசம் என்ன, மொழியாளர்கள்  பொருள் தேடத் துவங்கினார்கள் , 

 சுவர்க்கத்தை சுவர்க்கம் என்றும்  சொர்க்கம் என்றும் இரு சொற்களால் சுட்டுகிறோம்.  இரண்டில் எது சரி..? 

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...? , சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்...இரண்டும் திரைப்பட பாடல் வரிகள்.

டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம்  - சொர்க்கம்.  'நான் தேடிய சொர்க்கம் ' என்றொரு திரைப்படம் உண்டு.

சுஜாதாவின் ஒரு நாவல் 'மூன்று நாள் சொர்க்கம் '. மீண்ட சொர்க்கம் - பானுமதி பார்த்தசாரதியின் நாவல் .

அபிதா நாவலில் லா.ச.ரா சுவர்க்கம் என்கிற சொல்லைப்  பயன்படுத்தியிருக்கிறார். இதே சொல் எச்.முஜீப் ரஹ்மான் எழுதிய தீர்க்கத்தரிசி  நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது .

பேரறிஞர் அண்ணாவின் பிரபல மேடை நாடக வசனம் இது. 

' அடேய்  முட்டாள் புரூனோ, நீ சொல்வதைப் போல உலகம் உருண்டை என்றால் சுவர்க்கம் எங்கேயடா இருக்கும்...?'' அதைத்தான் நானும் கேட்கிறேன். எங்கே இருக்கும்..?' 

இச்சொல் குறித்து தேடுகையில் சங்க இலக்கியத்தில் சொர்க்கம் , நரகம்  என்கிற இரண்டும் துறக்கம் , நிரயம் என்றே  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் ( கலித்தொகை )

மறப்படைக் குதிரை, மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை( அகநானூறு)

சேர நாட்டு புலவரான ' பாலைக் கௌதமனார் ' துறக்கம் சென்றதாக பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்துப்பதிகம் பேசுகிறது. இலக்கியத்தில் துறக்கத்தைத் சிலரும், நிரயத்தைச் சிலரும் பேசியிருக்கிறார்கள். இரண்டையும் பேசிய  ஒரே புலவர் பரணர் மட்டுமே. 

துறக்கம் என்கிற தமிழ்ச்சொல்லுடன் ஸ்வர்கம் என்கிற வடசொல் சேர்ந்து உருவான சொல் சுவர்க்கம். அது மெல்லத் திரிந்து  சொர்க்கமாகியிருக்கிறது. 

ஆங்கிலத்தில் heaven, paradise இரண்டும் சுவர்க்கம்தான் என்றாலும் ஹெவன் என்பது மேலுலகம். கற்பனையானது. அனைத்து மதங்களும் கட்டமைப்பது. இது பலரால்  சொர்க்கம் எனச் சுட்டப்படுகிறது.

நான்கு புறமும் வேலியால் அமைக்கப்பட்ட மனிதன் வாழ்வதற்கு உகந்த வனம் சுவர்க்கம்.  ஆங்கிலத்தில்  paradise.  ஜான் மில்டன் படைத்தது  பாரடைஸ் லாஸ்ட் ( இழந்த சுவர்க்கம்). தஞ்சாவூரில் ராணி பாரடைஸ் என்றொரு திரை அரங்கமிருக்கிறது.

சொர்க்கம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீஜே அளித்த பதில் சமீபத்தில் சர்ச்சையானது. ' சொர்க்கம் என்பது வானத்தில் இல்லை. அது பூமியில் படைக்கப்படும்....' 

சொர்க்கம் என்கிற ஒன்று இல்லைவே இல்லை என்கிறது அறிவியல். இருக்கிறது என்கிறது மதவியல்.  

துறக்கம் - ஸ்வர்கம் - சுவர்க்கம் - சொர்க்கம் இந்த பரிணாம வளர்ச்சியின் மூலச் சொல் துறக்கம் என்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும். 

அட, ஸ்வர்கமே என்றாலும் நமூர் துறக்கம் போல் வருமா...? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்