பிலாக்கணம்

கு. சின்னப்ப பாரதி எழுதிய நாவல்களில் 'தாகம்' மிக முக்கியமானது. நாவலின் மைய பாத்திரம் மாரப்பன். இவர் வளர்க்கும் எருமை , கன்று ஈனப்போவது தெரிந்து நடு சாமத்தில் கை பக்குவ கிழவரை அழைத்து வருகிறார். எருமை கன்று ஈனும் வலியை நாவலாசிரியர் அத்தனை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதற்கிடையில் நடு சாமத்தின் காட்சி இவ்வாறு விரியும். ' ஊரே உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தது. எங்கும் நிசப்தம். இடையிடையே மனிதர்களின் இருமல் சத்தமும் மாடுகளின் அசை போடும் அரவமும், எதையாவது கண்டுவிட்டுக் குரைக்கும் நாய்களின் குரைப்பும், வறண்ட மண்ணில் குழி தோண்டிப் படுத்திருக்கும் தவளைகளின் செவியைப் பிளக்கும் பிலாக்கணமும் கேட்டுக்கொண்டிருந்தன'.

அது என்னது பிலாக்கணம்? 

ரவிச்சந்திரன் என்கிற கவிஞர் 'அசல் தேடும் நகலின் பிலாக்கணம்' என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் அவர் அடிக்கடி ரோம் நகரிலுள்ள மரியா டெஜிலி ஆஞ்சியோலி என்கிற தேவாலயத்திற்கு அடிக்கடி சென்று வருபவராக இருந்தார். காரணம் அங்கு அவரது ஆழ்மனதை சாந்தப்படுத்தும் ஓவியமொன்று இருந்தது. இயேசுவின் பிலாக்கணம் என்கிற ஓவியம் அது. இதைத் தீட்டியவர்  பெர்னார்டினோவ் லியூனி. இதுக்குறித்து பேரா.கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஒரு கட்டுரை பேசுகிறது.

எஸ்.பொன்னுத்துரை 'குழி ' என்கிற சிறுகதையை மனிதன் பிலாக்கணம் வைத்துக்கொண்டே வாழ்கிறான் என முடித்திருப்பார். 
யுவன் சந்திரசேகரின் ஒரு சிறுகதை 'முடிவற்று நீளும் கோடை'. இக்கதையில்  சமகால வயதுடைய இரு வயோதீக பாடகர்களின்  கதையுடன்;  கதைசொல்லி அவர் ஊரில் சிறந்த பாடகராக இருக்கும் பானு அக்காள் என்கிற பாத்திரத்தின் குரல் வளத்தைப் பேசியிருப்பார். துக்கவீட்டில்  பானு இராமாயனம் பாடுகையில் ' அந்த தெய்வீகமான பிலாக்கணம் எப்படா முடியும் எனக்காத்திருப்போம். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பானு அக்காள் இறந்து போக அந்த கானமும் இறந்து போனது ' என்பதாக அக்கதை நீளும்.

 புதுமைப்பித்தன் ' எப்போதும் முடிவிலே இன்பம் ' என்கிற சிறுகதையில் ' ஓய், என் வீட்டு வாசலில் உட்கார்ந்து பிலாக்கணம் வைக்காதேயும் ' என்பதாக ஓரிடம் வரும். விலங்குகள் பேசிக்கொள்ளும் கதை இது.

பேரா.மு.இளங்கோவன் 'தமிழில் ஒப்பாரி இலக்கியம் ' என்கிற ஆய்வு நூல் பிலாக்கணம் என்பது பிணக்கானம் என்பதன் திரிபு என்கிறார்.
'கி.வ.ஜா பதில்கள்  ' என்கிற நூலில் இப்படியாக  ஒரு கேள்வி - பதில் . பிலாக்கணம் எப்படி வந்தது?.  அதற்கான பதில், பிணக்கானம் என்பதே பிலாக்கணம் என்றானது. 

இச்சொல் குறித்து அகராதியில் தேடுகையில் நர்மதா கலைச்சொல்  அகராதி துக்க வீட்டில் பெண்கள் பாடும் பாடல் என்கிறது. ஆங்கிலத்தில் lementation.
நாம்  ஒப்பாரி எனப் பொருள் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்