வனிதை


சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் விடயத்தில் ஆண், பெண் பேதமற்ற சமத்துவம் நிலவ வேண்டுமென
வலியுறுத்தி  காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான  பெண் சுவர்க்கு கேரளம் கடந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா,  மராட்டிய மாநிலங்களென  பெண்களின் ஆதரவு பெருமித்திருந்தது. ஒரு முனை ( காசர்கோடு) யில்   கேரளாவின் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கரம் கோர்த்து நிற்க ,  மறுபுறம்  திருவனந்தபுரத்தில் பிருந்தாகாரத். இதற்கிடையிலான தூரம் 640 கிமீ, ஐம்பது இலட்சம் பெண்கள். இந்த மனிதச் சங்கிலி சுவரை திருவனந்தபுரம் வெள்ளியம்பலம் மகாத்மா அய்யன்காளி சிலைக்கு மாலை அணிவித்து  துவக்கி வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் பெண்களுக்கான சமத்துவ உரிமையையும் ஆளும் இடது முண்ணனி அரசு  எவ்விலைக் கொடுத்தேனும் நிலைநிறுத்துமென உறுதியளித்தார். இதன் விளைவாக,
அன்றைய தினமே சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இரு பெண்கள் கோவிலுக்குள் நுழைய  சங்பரிவாரங்கள் கலவரத்தை மூட்டினர். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த  இந்த  மனித சங்கிலி பெண் சுவருக்கு கேரள பெண்ணுரிமை ஆர்வலர்கள் சூட்டிய பெயர் 'வனிதா' சுவர்.

அது என்ன வனிதை?

கேரளத்தவர்கள் பேசும் மலையாளம்  திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்பதைக் கடந்து தமிழுக்கும் மலையாளத்திற்குமிடையில் எழுத்துரு ஒற்றுமையை விடவும் ஒலிப்பு ஒற்றுமை நிறைய உண்டு. அதிலொன்றுதான் வனிதா - வனிதை.

வனிதை என்கிற சொல்லை பாவேந்தர் பாரதிதாசன் எதிர்பாராத முத்தம் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்.
' வண்ணக் கலாப மயில்போல் மற்றொருவனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்;புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும்குளிப்ப தற்கும் சென்றார்குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே! '

இதே சொல்லை செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் பயன்படுத்தியிருக்கிறார். குலோத்துங்கச் சோழனின் போர் வெற்றியைக் கொண்டாடும் பொருட்டு தூங்கும் பெண்களை எழுப்பும் பரணியில் ' பெண்கள் இடை சிறுத்து , முலை பெருத்து பாரம் தாங்காமல் நிற்கிறார்கள். அவர்களின் கூந்தல் மணத்தால் வண்டுகள் தலையில் அமர, மேலும் சுமையால் இடை ஒடிந்துவிடுமேயென எழுந்து பறக்க, அமர வேறு இடமில்லாமல் மீண்டும் தலையில் அமருகிறது. அத்தகைய மலர் கூந்தலுடைய பெண்களே கதவுகளைத் திறந்து விடுங்கள் ' என்பது பாடல். அப்பாடலின் கடைசி வரி ' அளக வனிதையர் ! அணிகடை திறமினோ!'

கு.ப.சேது அம்மாளின் ஒரு சிறுகதைத்தொகுப்பு - வீர வனிதை

காந்தை, சுந்தரி, வனிதை, நாரி, பிரியை  - இவை வடமொழி பெண் சூட்டுப் பெயர்கள் ( சூடாமணி நிகண்டு)

'கனியில் மேவும் ரச இனிமைபோல - இந்த வனிதை வாழ்வில் நீர் அல்லவா!' - உடுமலை நாராயணக்கவியின் திரைப்பட பாடல்.

'அணியில்லாத கவிதை பணியில்லாத வனிதை' என்பது பேச்சு வழக்கு.

'பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட/புனிதனை வனிதை பாகனை வெண்/கோவணங் கொண்டு வெண்டலை/ ஏந்தும்' என்கிறது ஒன்பதாம் திருமறை.

 'வனிதை பாகன் மகிழ்ந்தெதிர் தோன்றினான்'  (திருக்காளத்தி புராணம்)

தமிழில் வனிதை என்பது மலையாளத்தில் வனிதா.

வனிதா போலீஸ் (1984 ) ஆம் ஆண்டு வெளியான முதல் பெண் மைய மலையாளத் திரைப்படம். சீமா, சுகுமாரி முதன்மைப் பாத்திரமாகவும், பிரேம் நசீர், மோகன்லால் முக்கிய பாத்திரமாகவும் நடித்த அத்திரைப்படத்தின் பாதிப்புதான்  நடிகர் விஜயசாந்தி.

மாத்ருபூமி ( மாத இதழ் ), வனிதா ( வார இதழ் ) இரண்டும் மலையாள முதன்மை பத்திரிகைகள். தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் விருது போன்று கேரளத்தில் வனிதா விருதுகள்.

நம்மூர் பெண்களுக்குச் சூட்டப்படும் வனிதா என்பது மலையாளப் பெயர். இதன் பொருள் ' பெண் '.

தமிழில் பெண்ணைச் குறிக்கும் சொற்களாவன- அணங்கு, அரமகள், அரமான், அரம்பை, தெய்வப்பெண், தெய்வமகள், தேவமாதர், மதனோற்சவை, இளம்பெண், பாலிகை, கன்னி, நன்னுதல், பாவை, மகள்,மாது, காரிகை, வனிதை,.... இதில் வனிதை என்பது முல்லை நில பெண்ணைக் குறிக்கும் சொல். இச்சொல்லின் வேர்ச்சொல் "வனம்தாய் - வனதாய்  - வனிதை - வனிதா"



பொதுவாக பெண்ணைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் -  WOMAN . இங்கு வனிதை, வனிதா என்பது ஒரு நிலம் சார்ந்த சிறப்பு பெயர். இதன் ஆங்கிலச் சொல் damsel. இதை எளிய தமிழில்  'மங்கை ' எனச் சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்