ஆகிருதி
எழுத்தாளர் பிரபஞ்சன் , உடல் நலிந்து புதுச்சேரி மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க கவிஞர் லீனா மணிமேகலை சென்றிருந்தார். அப்பொழுது பிரபஞ்சன் நண்பர்கள் குறித்து விசாரித்துவிட்டு சொன்னார் ' ஒருத்தனுக்கு வாழும்போது ஆகிருதி சிறுத்துப்போறது துயரம் மணி' . மணிமேகலை கண்ணீரை அடக்கிக்கொண்டு சொன்னார் ' உங்களுக்கென்ன, அதே கம்பீரமும் மிடுக்குமாத்தான் இருக்கிறீங்க'
பிரபஞ்சன் அவரது எழுத்தைப் போலவே அத்தனை கம்பீரமானவர். அவர் தமிழுக்காக இன்னும் ஒரு நூற்றாண்டு வாழத்தான் வேண்டும்.
அது என்னதாம் ஆகிருதி?
மாலன் அடிமைகள் சிறுகதையில் இசசொல்லை பயன்படுத்தியிருக்கிறார். ' அறைக்குள் நுழைந்த போது அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். புதிய முகங்கள் - முன்பின் அறிந்திராத நபர்கள். நான்கு பேர். நடுத்தர வயது. நல்ல ஆகிருதி'
க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி ஆகிருதி என்பது ஆண்களுடன் தொடர்புடைய சொல் என்கிறது. ஆனால் சொல்லை பெண் பாலுக்கு பயன்படுத்தியிருக்கிறார் ' ஆத்தா' சிறுகதையில் ஜி.கோமளா . கண்களை மூடி சம்மணமிட்டு குலவை கொட்டிக்கொண்டிருந்தாள் கூரியாயி. ஆறடிக்கு அரையடி குறைவு உயரம். அதற்கேற்ற சதைப்பிடிப்பு. ஓங்கு தாங்கான ஆகிருதி.
மதுரைத் தமிழ் பேரகராதி அடிதோறும் இருபத்திரண்டு அசை கொண்டு நான்கடியாய் ஒற்றற்ற சந்தமாய் முடியும் பாட்டை ஆகிருதி என வகைப்படுத்தியுள்ளது கூடுதல் தகவல்.
பிரபஞ்சன் பயன்படுத்திய ஆகிருதி என்பது உடல் குறித்தது. இதை ஆங்கிலத்தில் physique என குறிக்கப்படுகிறது. உடம்பு என்றும் , வடிவம் என்றும் , உடல்வாகு என்றும் அகராதிகள் பல பொருளைத் தந்துள்ளன.
ஆகிருதி என்பது 'உடம்பின் வடிவம்' எனப் பொருள் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக