ஏகன்

சிறுபான்மையினரின் பாதுகாவலர்களே பெரும்பான்மையினர் - முனைவர் செபாஸ்டியன் பால் அக்டோபர் -10, தீக்கதிரில்  எழுதிய கட்டுரை இது.  மொழிபெயர்ப்பு கே.சதாசிவன். 

‘ஒரு மனிதன் ஏகனாக இருப்பது நன்றல்ல. அவனுக்குப் பொருத்தமான இணையை நான் கொடுப்பேன் ’ (ஆதியாகமம்) வாசகத்தோடு கட்டுரை துவங்குகிறது. குற்றத்தண்டனைச் சட்டம் 377 பற்றிய இக்கட்டுரையில் ‘ தன்பாலின உறவு அறநெறி அடிப்படையில் சரியானதோ, ஏற்றுக்கொள்ளத் தகுந்ததாகவோ உள்ளதல்ல’ என்று கேரளா கத்தோலிக்க ஆயர்கள் சபையும் ;அதையொற்றியே ஜமா - அத்தே - இஸ்லாமி அமைப்பும் கருத்துத்தெரிவிக்கின்றன. பிரான்சிசின் திருச்சபை ‘ பாலியல் உறவுகளில் உள்ள மாறுபட்ட தன்மைகளை பாவமாகக் கருதவில்லை' என்றும் இதுகுறித்த மற்றொரு கேள்விக்கு ‘ அவர்களைத் தண்டிக்க நான் யார்?’ என்கிறது. தன்பாலின உறவு செல்லும் என ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்பு சிறுபான்மையினருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்பட வேண்டும். தன்பாலின உறவு குறித்து கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவில்லை என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. 

 சரி, ஏகன் என்பது என்ன...?

சிவபுராணம் ‘ ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க’ என்கிறது.
ஏகன் வருவானா? ஞானம் சஞ்சிகையில்  எஸ்.முத்துமீரான்  எழுதிய  ஒரு சிறுகதை.  

'பெர்டிடுர்கே ( FERDYDURKE )' என்றொரு நாவல். போலந்து நாட்டு 'விடோல்டு கோம்ப்ரோக்ஸ் ( Witold Gombroqicz )' 1937 ஆம் ஆண்டு எழுதியது. இந்நாவலின் படி, 30 வயது வாலிபன் திடீரென பள்ளி வயது மாணவனாக உருவம் மாற பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அங்கு அவன் வயதுடைய மாணவர்களிடம் படும்பாடுதான் கதை. இக்கதையை தழுவி ஹாலிவுட் படம் எடுத்தார்கள். படத்தின் பெயர் 'நெவர் பீன் கிஸ்டு'. வாலிப பெண் மாணவப் பருவமாக மாறி  பத்திரிகை பெண்ணாக பள்ளிக்குள் நுழைகிறாள்.  இதே கதையை 'மெயின் ஹீன் னா' என்று ஷாருகானை வைத்து இந்தியில் எடுத்தார்கள். இதே கதையை
தமிழிலும் எடுக்கப்பட்டது. கதாநாயகன் அஜித். படத்தின் பெயர் ஏகன்.

அன்றைய எகிப்திய நாட்டில் ஏகநாதன் (Akhenaton ) என்றொரு மன்னன் இருந்தான். அவனது ஒரே கடவுள் ஏதேன். இச்சொல்தான் இவ்வாறாக மறுவுகிறது ஏதன் - ஏகன் - ஏக் - ஏகம் - ஒரு - ஒருமை - ஒரே இறைவன். தமிழும் இத்தாலியும் - மத வழிபாடுகளில் தொடர்புடைய சொற்கள் என சொற்களை ஆய்வு செய்திருக்கும் தமிழ்செல்வா, ஏகன் என்கிற சொல்லின் மூலம் தமிழின் 'ஏகத்துவம்' என்கிறார்.

இதன் தொடர்புடைய சொற்களாக ஏகம், ஏகாதிபதி, ஏகாதி , ஏகபத்தினிவிரதம், ஏகபாதம் ...என நிறைய சொல்லலாம்.

ஏகன் சொல் குறித்து தேடுகையில் அபிதான சிந்தாமணி இரேயன் குமரன் என்கிறது. தமிழ் அகராதிகள் -  ஒருவன், இறைவன், இணையற்றவன்,  சிறப்புடையவன்,..என்கின்றன.

கட்டுரையின் துவக்க வரியிலிருந்து அதன் பொருளைத் தேடுகையில் ஏகன் என்பதை 'தனி ஒருவன்' எனப் பொருள் கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்