அபலை

Letter from an un-known woman என்றொரு குறுநாவல். ஜெர்மன் எழுத்தாளர் ஸ்ரிபன் செவாக் ( Stefan Zweig ) எழுதியது. ஒரு எழுத்தாளர் சக எழுத்தாளருக்கு எழுதும் கடிதமே இந்நாவல்.

 இரா என்கிற  எழுத்தாளரை ஒரு  பெண் வாசகர் தனியாக சந்திக்கிறாள். இருவருக்குமிடையே நீளும் உரையாடல் உடலிச்சையில் சென்று முடிகிறது. தவறான உறவால் ஒரு குழந்தை பிறந்து அது இறந்தும் விடுகிறது. குற்றவுணர்விற்குள்ளாகும் அப்பெண் நடந்த சம்பவத்தை தன்பெயர் குறிப்பிடாமல்  நாவலாசிரியருக்கு  கடிதம் எழுதுகிறாள். அக்கடிதமே நாவல். 

இந்நாவல் வெளியானதும் நாவலாசிரியரிடம் தவறாது கேட்டக் கேள்வி, ' இச்சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்ததா ? ' என்பதுதான்.

இந்நாவலை இலங்கை நாவலாசிரியர்
செ.கணேசலிங்கம்  'அபலையின் கடிதம் ' என்கிற தலைப்பில் மொழிபெயர்த்தார்.

The fox with the golden tail (பொன்வால் நரி  ) - மகாகவி பாரதி எழுதிய ஆங்கில சிறுகதை. இந்திய விடுதலைப் போராட்டம் திலகர், அரவிந்தர்,...தலைமையில் தீவிரமாக நடந்துகொண்டிருந்த பொழுது இவர்களின்  போராட்ட முன்னெடுப்பை கடுமையாக எதிர்த்தார் அன்னிபெசன்ட் அம்மையார். இவர் ஹோம் ரூல், தியாசபிகல் சொசைட்டி, ஆன்மீகம்,.. என பல்துறையின் வழியே இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்திருந்தார். இந்தியா முழுவதும் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எதிராக தலைவர்கள் களம் கண்டார்கள். தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.உ.சி, பாரதியார் போன்றோர். அவரது கொள்கைகளை எதிர்க்கவும் நையாண்டி செய்யவும்  பாரதியாரால் எழுதப்பட்ட கதைதான் பொன்வால் நரி.

நரிகளின் தேசத்தில் (பிரிட்டன்) ஒரு கிழட்டு பெண் நரி ( அன்னிபெசண்ட்) இருந்தது. அதற்கு கர்வம் அதிகம் என்பதால் அதன் வாலை நறுக்கிவிட்டார்கள். அந்த நரி தங்கமுலாம் பூசப்பட்ட வாலைப் பொருத்திக்கொண்டு கழுதை,குரங்குகளின் தேசத்தில் (இந்தியா)நுழைந்து உங்களை விட நரிகளுக்கு ( பிரிட்டிஷ்காரர்கள்) அறிவு அதிகமென புகழ்பாடி திரிந்தது. தன் பேச்சுத் திறமையால் சில கழுதைகளை தன் நாட்டிற்கு அழைத்துச்சென்றது. அக்கழுதைகள் திரும்பி வர வேண்டுமென வழக்குத் தொடர, பொன்வால் நரி கழுதைகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டாமல் பொன் வாலை இழந்து வேறொரு நாட்டிற்குத் தப்பி ஓடுகிறது.

டிசம்பர் 9-15  ஜனசக்தி இதழில் எல்லை.சிவக்குமார் இதேயே சற்று மாற்றி எழுதியிருந்தார். இங்கு நரிகளின் தேசம் ( அம்பானி, அதானி), பொன் வால் ( பாஜக, சங் பரிவார்), கழுதை ,குரங்குகளின் தேசம் (  ஏமாந்த அபலைகள் ) . முதலில் ஏமாறும் குரங்கு,கழுதைகள் பிறகு சுதாகரித்து பொன் வாலை பறித்துகொண்டு விரட்டி அடிக்கிறது.

அது என்னதாம் அபலை?

அபலை (1949), அபலை அஞ்சுகம் ( 1959)  - இவை இரண்டும் திரைப்படங்கள்.

ஓர் அபலையின் டயரி ( சமூக நாவல் ) - ஜரீனா முஸ்தபா ஏ.சி எழுதியது.

அகநானூறு அதிசயங்கள் - லண்டன் சுவாமிநாதன் எழுதிய ஒரு கட்டுரை. இதில் பெண்பாலின பெயர்கள் வடமொழியில் ' ஆ'  கொண்டும் இதுவே தமிழில் ' ஐ ' அல்லது 'இ' கொண்டு முடிவதாக குறிப்பிட்டு உதாரணமாக சீதா - சீதை , கோதா - கோதை , அபலா - அபலை எனக் காட்டியிருக்கிறார்.  தாவரத்திற்கு உயிருண்டு என நிரூபித்த ஜெகதீஸ் சந்திர போஷின் துணைவியார் பெயர் அபலா போஸ். 

சூத்திரம் என்கிற பத்திரிகை ' நந்தினி - தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை ' என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது. இதில் , 'அபலைப்பெண்ணைக் காதலிப்பதைப் போல நடித்து... 'என்பதாக அச்செய்தி விரியும்.

இச்சொல் குறித்து தேடுகையில்  தமிழ்ச்சொல் அகராதிகள் அபலை என்கிற சொல்லிற்கு பெண், துணையற்றவள் எனப் பொருள் தந்துள்ளன.

கல்கி 'அபலையின் கண்ணீர்' என்றொரு  குறுநாவல் எழுதினார் . இக்கதை Tears of a Damsel in Distress என ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இங்கு Damsel என்பது அபலை. இதை காரிகை என்றும் சொல்லலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

புல் - பெரிதினும் பெரிதுகாண்