யக்ஞம்

'இராஜலெட்சுமியும் தீபாவளியைக் கொண்டாடியிருப்பாள்' 06.11.2018, தீக்கதிரில் களப்பிரன் எழுதிய கட்டுரை. சேலம் மாவட்டம் , தளவாய்ப்பட்டி கிராமம் , பதின்மூன்று வயது குழந்தை  இராஜலெட்சுமியை , தினேஷ்குமார் என்கிற சாதி வெறியன் தாயின் முன்பாகவே கழுத்தை அறுத்து ,  கொலை செய்கிறான். அவளுக்காக அவ்வூரில் ஒரு சுவரொட்டி இல்லை, கண்டன அறிக்கையோ, இரங்கல் கூட்டமோ இல்லை.  உலகமே, தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்க, இராஜலெட்சுமியின் வீட்டில் 15 ஆம் நாள் காரியம் நடந்துகொண்டிருக்கிறது...இச்சம்பவத்தை  வாசிக்கையில் யாருக்குத்தான் நெஞ்சு பதைக்காது.

 தமிழ், இனம், திராவிடம், பாரதம், தேசியம்...என்கிற பெயரால் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் தலைவர்களின் திருவாய் சட்டென மௌனித்துப் போனதை என்னவென்று சொல்வது..! இவர்களின் மௌனம் தலித்களை ' யக்ஞம் ' என்கிற சிறுகதையில் சீதாராமுடு எடுத்த முடிவை நோக்கித்  தள்ளுவதாக இருக்கிறது. 

தெலுங்கு இலக்கிய உலகில் 'காளீபட்னம் ராமாராவ் ' எழுதிய ' யக்ஞம்'என்கிற சிறுகதை,  இந்திய இலக்கியத்தை மட்டுமல்ல, சனாதன கட்டமைப்பை ஒரு அசைவு அசைக்கவே செய்தது.

 'கோபண்ணா என்கிற வியாபாரியிடம் அப்பல்ராமுடு என்கிற தலித் கடன் வாங்குகிறார். அவரால் உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. ஸ்ரீராமுலு நாயுடு என்கிற மேற்சாதிக்காரனிடம்  பஞ்சாயத்து செல்கிறது. அவன் , கடனைத் தீர்க்க அப்பல்ராமுடமிருந்து நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிகொள்கிறான். இது அப்பல்ராமுடுவின் மகன் சீதாராமுடுக்கு தெரியவருகிறது. அவன், விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனைத் தேடிப்பிடித்து பஞ்சாயத்து மண்டபத்திற்கு அழைத்துச்சென்று ,  அவர்கள் பார்க்க மகனின் கழுத்தை அறுத்து, தலை வேறு, உடம்பு வேறாகக் கிடத்துவிட்டு சொல்கிறான். 'என் அப்பன் உங்களுக்கு அடிமை. அவருக்குப் பின்  நான் அடிமை. எனக்குப்பிறகு என் மகன் அடிமையாக இருக்கமாட்டான்...'. 

யக்ஞம்...? 

கமலாதேவி அரவிந்தன் எழுதிய எங்கேயும் மனிதர்கள் என்கிற சிறுகதையில் இச்சொல் இடம்பெற்றுள்ளது. 

ஜெயகாந்தனின் ஒரு நாவல் - மஹா யக்ஞம். 

மலையாள எழுத்தாளர் கே.பி.ஸ்ரீதேவி யக்ஞம் என்கிற பெயரில் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.

தமிழை ஆண்டாள் - வைரமுத்து எழுதிய  கட்டுரையில் ' யாகம் - யக்ஞம் - தவம் - வேள்வி - விரதம் என்ற கடுநெறிகளைக் கழற்றி எறிந்துவிட்டு கடவுளின் நற்குணங்கள் என்று கருதப்படுகின்ற...' என்பதாக ஒரு பத்தி.

மரக்கால் - சோலை சுந்தரபெருமாள் எழுதிய ஒரு வரலாற்று நாவல். இந்நாவலுக்கு அவர் எழுதிய முன்னுரையில்
'  களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமணர்களிடமிருந்து பிரமதேயங்களும் பட்டமங்களங்களும் பறிக்கப்பட்டன. பிறகு ஆட்சிக்கு வந்த பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் வேள்விக்குடி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. வேதம் என்பது ஸ்மிருதியைக் குறிக்கிறது. ஸ்மிருதி என்பது அருவவழிபாடு.  நெருப்பில்  ஆகிருதிப் பெய்து கடவுளை வழிபடுவது. கடவுளுக்கும் மனிதனுக்குமான சாதனம் நெருப்பு.  இந்த நெருப்பிற்குப் பயன்படும் ஓமகுண்டலம் யக்ஞம்...

இதுக்குறித்து தேடுகையில், இச்சொல்  ரிக் வேதகால சொல்லாக இருக்கிறது.  வேள்வி, தியாகம், யாகம் என பல பொருள்கள் தருவதாக இருகின்றன. ஆங்கிலத்தில்  sacrifice. தமிழில் நரபலி என்றும் சொல்லலாம்.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்