சம்பாசனை
'எங்கே போகிறோம் ? ' கே.எஸ்.சுதாகர் எழுதிய ஈழ சிறுகதை.
செல்வராசா, சந்திரன் இருவரும் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். சந்திரன் துபாயில் பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து நாடு திரும்பியவன். விதவையான தங்கைக்கு வரனாக சகபயணி செல்வராசாவைப் பார்க்கிறான். வெண்முடி தரித்த வயது. அவருக்கே தங்கையை முடித்துவிடலாமென நினைக்கிறான். இதற்கிடையில் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைக்கும் கீழே ஒருவர் வாழை இலைக்கட்டை வைத்துவிட்டு செல்கிறார். அதற்குள் புலிகளின் இலட்சணையுடன் கூடிய நோட்டிஸ் இருக்கிறது. அது சிங்கள சிப்பாய்களின் பார்வைக்கு வர, நோட்டிஸ் வைத்தவர்களைத் தேடுகிறார்கள். பேருந்திற்குளிருந்த ஆறு தமிழக பயணிகளைக் கைது செய்து வதைக்கிறார்கள். இதை யார் வைத்ததென சொல்லவில்லையென்றால் ஆறு பேரையும் சுடுவேன் என்கிறார்கள். ஐந்து பேர்களைக் காப்பாற்ற சந்திரன் செய்யாத ஒன்றைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறான்.
இக்கதையில் செல்வராசா, சந்திரன் இருவரும் உரையாடுகிறார்கள். ' உங்களுடைய பிள்ளையா, எதுவரை போறீங்க?' ' ஆச்சிக்கு சுகமில்லை' . சந்திரனின் பதில் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் சம்பாசனை வாழைக்குருத்து போல் மளமளவென தொடர்ந்தது.
அது என்ன சம்பாசனை?
சிங்கப்பூர் அப்பொழுது மலேயா நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்தது. 1888 ஆம் ஆண்டு மகுதூம் சாய்பு , 'சிங்கை நேசன்' என்றொரு நாளிதழைத் துவங்கினார்.
அதில் வாரம் ஒரு சிறுகதை எழுதினார். இக்கதைகளே சிங்கைத் தமிழின் முதல் சிறுகதை முயற்சி என்கிறார்கள். இக்கதைகளை எழுத சாய்பு பயன்படுத்திய புனைப்பெயர் ' வினோத சம்பாசனை '.
வ.ரா எழுதிய ஒரு நூல் 'சுவர்கத்தில் சம்பாசனை'
ஜெ'வின் உடைத்தேர்வுகள் அவரது ஆழ்மனதின் வெளிப்பாடா ? திசம்பர் 09, 2016 நாளிட்ட தினமணியில் கார்த்திகா வாசுதேவன் ஒரு கட்டுரை எழுதினார். ஜெயலலிதா உடை தேர்விற்கும் அவர் எதிர்கொண்ட பிரச்சனைக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அக்கட்டுரை. ' நேற்று என் வீட்டருகே இருந்த குடியிருப்பு பெண்களுக்கிடையே நிகழ்ந்த சம்பாசனையே இக்கட்டுரையை எழுதத் தூண்டியது' என்கிறார் அவர்.
சம் என்கிற உரிச்சொல்லுடன் பாசனை என்கிற நிலைச்சொல் இணைந்து உருவாகும் சொல்லாக சம்பாசனை இருக்கிறது. சம் என்பதற்கு கலப்பு , கூட்டு , கூட, பிறப்பு எனப் பொருளிருக்கிறது. இரு வேறின இனங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை மநு சாஸ்திரம் சம்கரர் என்கிற சாதியின் கீழ் வகைப்படுத்தியிருக்கிறது என்பது இது தொடர்பான கூடுதல் செய்தி .
பாசனை குறித்து தேடுகையில் சோலை சுந்தரபெருமாள் எழுதிய பெருந்திணை நாவலில் ' இவரோட யோசனை பாசனை இல்லாமல் வேலை செய்தது இல்லை ' என்பதாக ஓரிடம் வருகிறது.
உஜ்ஜைன் நாட்டு மன்னர் சூத்திரகன், வடமொழியில் ' மிருச்சகடிகம்' என்றொரு நாடக நூலை இயற்றினார். அதை பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் ' மண்ணியல் சிறுதேர் ' என தமிழில் மொழிப்பெயர்த்தார். இதை 'மண்ணியல் சிறு தேர் - ஒரு மதிப்பீடு' என மீரா அவர்கள் இந்நூலினை மதிப்பாய்வு செய்தார். இந்த ஆய்வு நூலுக்கு முன்னுரை எழுதிய பேரா.இராமாநுசன் ' பாசனை ஆசானாக்குவது தகுமா? ' என்கிற கேள்விக்கு விடை தேடுவதாக மீராவின் ஆய்வு இருக்கிறது என்கிறார். அதாவது 'இந்நாடகத்தின் உரையாடலே வாசகனுக்கான ஆசான்'.
இதைக்கொண்டு பார்க்கையில் சம் + பாசனை என்பதை கலந்துரையாடுதல் எனப் பொருள் கொள்வோமே
கருத்துகள்
கருத்துரையிடுக