ஓற்பலம்


தேவதாஸ் , சரத் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய காதல் காவியம்.  பிராமண குடும்பத்தைச் சேர்ந்த தேவதாஸ் ,  (தந்தை நாராயண முகர்ஜி) . தன் பக்கத்து வீட்டு சிறுமி பார்வதியுடன் சேர்ந்து விளையாடுகிறான்.  இவனது அன்பை விடவும் அவள் காட்டுவது பேரன்பாக இருக்கிறது. குழவிப் பருவத்தில் துவங்கும் இந்தப் பாசப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் காதலில் வந்து நிற்கிறது.

பார்வதியின் தந்தை நீலகண்ட சக்கரவர்த்தி மகளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். தேவதாஸ், தன் பெற்றோருடன் பார்வதிக்காக பேசுகையில் அக்குடும்பம் தமக்கு நிகரானக் குடும்பமல்ல என மறுத்துவிட பார்வதி, புவன் சௌதுரி என்கிற செல்வந்தருக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்படுகிறாள். 

பார்வதியின் பிரிவு தேவதாஸைக் கவலையில் தள்ளி குடியில் ஆழ்த்துகிறது. அவனது நிலையைக் கண்டு கவலைப்படும் சந்திரமுகி என்கிறவள் அவன் மீது நேசம் கொள்கிறாள். அவளிடமிருந்து விலகும் தேவதாஸ்  தந்தை மரணத்திற்குப் பிறகு சொத்துகளை விற்று , குடித்து, நோயுற்று,  மரணவாயிலை நெருங்கி பார்வதி வீட்டு வாசல் முன் இறந்து கழுகுகளுக்கு இரையாகிறான். 

இந்நாவலின் ஓரிடத்தில் தேவதாஸ் , பார்வதியின் கண்களை 'நீலோத்பலம் ' என வர்ணிக்கிறான். ( மொழிபெயர்ப்பு - புவனா நடராஜன் ). 

இரம்மிய தேசத்து மக்கள் நிலோத்பலம் மலர் போன்ற நிறத்தை உடையவர்கள் என்கிறது புராணம். 

புன்னை,சண்பகம்,பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம்,அரளி, நீலோத்பலம், தாமரை - இவை அதிர்ஷ்ட மலர்கள் என்கிறது ஆன்மீகம்.

 சங்க இலக்கியங்கள் நீலோத்பலம்  மலரை நீலம் எனப்பாடியுள்ளன.

 பிரமிள் எழுதிய ஒரு சிறுகதை 'நீலம் '.  இக்கதையில் மேற்கத்திய ஓவியங்களை கிறுக்கல்களாக வரைந்து திரியும் ஒரு ஓவியனிடம் ஒரு சிறுவன் ஒரு பூவைக் கொடுத்துவிட்டுச் செல்கிறான் அப்பூ, நீலோத்பலம். 

நீலோத்பலம்  தாமரை ,  அல்லி, ஆம்பல் போன்று தண்ணீரில் வளரக்கூடிய மலர். 

ஆம்பல் போலவே நீலமும் இருக்கும். ஆம்பல் வேறு, நீலம் வேறு. இதழ் கூர்மையாகக் கொண்டது ஆம்பல். இதழ் முனை மழுங்கி இருப்பது நீலம்.

பெண்களின் கண்களுக்கு நீலத்தையும் ஆண்களின் கண்களுக்கு தாமரையையும்  உவமையாகச் சொல்கிறது இலக்கியம்.

நீலத்து அன்ன பாசிலை - நற்றிணை

நீலத்து அன்ன பைம்பயிர் – மதுரைக்காஞ்சி

வள்ளிதழ் நீலம் - குறுந்தொகை

ஸ்ரீலங்கா 1986 ஆம் ஆண்டு அமைச்சரவையைக் கூட்டி தேசிய மலரென நீல அல்லியை  அறிவித்தது. பிறகு அம்மலரின் பெயரை நீலோத்பலம் எனத் திருத்தியது. 

நீலம்-தமிழ்ப்பெயர். நீலோத்பலம்-வடசொல்.

நீலோத்பலம் எனத் திருத்தியதற்குப் பிறகு வெளியிடப்பட்ட  அரசாணையில்   மலரின் படம் வேறொன்றாக இருக்க பேராதனைப் பல்கலைக்கழக தாவிரவியல் பேராசிரியர்கள்   இது நீலோத்பலம் அல்ல எனச் சுட்டிக்காட்டினார்கள். 

அல்லியில் 50 வகைகள் உள்ளன. வெளிர் நீல அல்லியே நீலோத்பலம். ஆனால் ஸ்ரீலங்லா அரசு வெளியிட்டது கருஅல்லி.  அரசாணையை மேலும் திருத்தம் செய்த அவ்வரசு தற்போது நீர்அல்லியை தேசிய மலராக ஏற்றுக்கொண்டுள்ளது.

நீலோற்பலம் என்பதே  நீலோத்பலம் என்றாகியிருக்கிறது. நீலம் + ஓற்பலம்

நீலம் - மலர் 

ஓற்பலம் என்பது? 



நீலோற்பலம் , தவளோற்பலம் , மாவோற்பலம்  இம்மூன்றும் இச்சொல்லுடன் தொடர்புடைய பிற சொற்கள்.

நீலோற்பலம் என்றால் நீல ஆம்பல்,  அல்லது கருங்குவளை.

தவளோற்பலம் என்பது  வெள்ளை அல்லி (வெண்ணல்லி ) அல்லது  வெண்குவளை.

மாவோற்பலம் ( மகோற்பலம்)  என்றால்  தாமரை .

கீழிருந்து மேலாக தண்ணீர் குவளையைப் போல விரிந்தடுக்குத்  தொகுப்பிற்கு ஓற்பலம் என்று பெயர். ஆகவே இதை 
 தமிழில் குவளை எனச் சொல்லலாம்.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தவல்லி

அபலை

புல் - பெரிதினும் பெரிதுகாண்