ஆவணி அழகனும் ஆனைக்கொம்பனும்
‘ஆடி
போனால் ஆவணி, ஆளை மயக்கும் தாவணி’ என்பது ஒரு சினிமாப் பாடல். இங்கு ஆவணி – தாவணி இரண்டும்
சந்தச்சுவை சொற்கள். தாவணி என்பது வளரிளப் பருவப் பெண் அணியும் ஆடையாகும். ஆவணி மாதம்
தாவணி அணிந்தவளுக்கு உடனே திருமணம் கைகூடும் என்பது முன்னோர் நம்பிக்கை. இதைச் சொல்லும்
விதமாகவே “ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம்.” என்கிற
பழமொழி விளங்குகிறது.
ஆவணி
மாதங்களில் சிறப்பானது. கார் காலம் தொடங்குவது இந்த மாதத்தில்தான். நம் அண்டை மாநிலமான
கேரள மலையாளத்தில் முதல் மாதம் ஆவணிதான். இம்மாதம் அங்கு சிம்மம் ராசியின் பெயரால்
சிங்கம் என்று பெயர்க்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆவணி மாதம் மடங்கல் மற்றும் கார் என்கிற
பெயரால் அழைக்கப்படுகிறது. மடங்கல் என்பது தனித்தமிழ்ச்சொல். இதன் பொருள் சிங்கம்.
ஆவணி
மாதத்தின் சிறப்பு ஞாயிறு. ஆவணி மாதத்து ஞாயிற்றுக் கிழமைகள் முதற்கிழமை, இடைக்கிழமை,
கடைக்கிழமை என்பதாக சுட்டப்படுகின்றன. அதாவது ஆவணி மாதத்தின் முதல் ஞாயிறு முதற்கிழமை
என்றும் கடைசி ஞாயிறு கடைக்கிழமை என்றும் இடையிலுள்ள ஞாயிறுகள் இடைக் கிழமை என்றும்
அம்மன் பெயரால் விரதமிருந்து கொண்டாடப்படுகின்றன.
ஆவணி
ஞாயிறு கொண்டாடப்படுவதற்கும் பின்னே அம்மை நோய் காரணமாக இருக்கிறது. அம்மை நோய் மனித
குலத்தை அழித்து தாண்டவமாடுகையில் காற்று அந்த நோயைத் துடைத்துச் செல்கிறது. இதிலிருந்து
பிறந்ததே ஆடி வந்தால் அம்மையும் பறக்கும். இந்த அம்மைதான் பிறகு அம்மி என்றானது. அம்மை
நோயை மக்கள் அம்மனாகப் பார்த்தார்கள். அம்மா இறங்கிருக்கிறாள், அம்மா குடியிருக்காள், அம்மா போட்டிருக்காள் இப்படியாக.
அம்மை என்பது உயிர்க்கொள்ளும் நோய். அம்மை
பீடித்திருப்பவரின் உயிரை எடுக்காது விட்டுச்சென்றால் பதிலுக்கு உயிர் தருவதாக
மக்கள் வேண்டிக்கொண்டார்கள். அந்த வேண்டலை
நிறைவேற்றும்பொருட்டு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று வாசலில் பசுமாட்டுச் சாணத்தில்
திட்டாணியிட்டு அந்த சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல் செருகி அருகில் ஒரு
செம்பில் மஞ்சள்த் தண்ணீர் வைத்து அதில் வேப்பிலைக் கொத்து செருகி பொங்கல் வைத்து பானை
பொங்குகையில் கூவும் சேவலைப் பிடித்து அதன் தலையில் மஞ்சட்தண்ணீர் தெளித்து சேவல் தலையைக்
குலுக்கையில் சேவலை அறுத்து அதன் இரத்தத்தை வீட்டைச் சுற்றிலும் பொட்டுவைத்து சேவலை
வாசலில் விடுவர். சேவல் இறக்கை அடித்துக்கொண்டு
துள்ளிக்குதித்து அறுபட்ட தலைபகுதியை ஏதேனும் ஒரு திசையின்பக்கம் வைத்து உயிரைவிடும். அப்படியாக தலை வைக்கையில் அது வைக்கும் திசையை வைத்து
குடும்பத்தின் நலனைக் கணித்துக்கொள்வர்.
சேவல் கிழக்கில்
தலை வைத்து உயிரை விட்டால் இனிவரும் காலம் சிறப்பாக இருக்கும். வடக்கில் உயிர் விட்டால்
நோய்நொடி தீண்டாது. தெற்கு சுபம், மேற்கு நோயும்
பிரச்சனையும் மெல்லத் தணியும். வடக்கில் சேவல் தலை வைத்து உயிர்விடுவதை பெரிதும் விரும்புவர்.
இதற்காக வீட்டில் சேவல் வளர்க்கையில் அதைப் பிடித்து கொஞ்சி அதன் கொண்டையைத் தடவிக்கொடுத்தபடி,
“கடைக் கிழமை அன்றைக்கு வடக்கே தலை வைத்து
உயிரை விடணுமென” சொல்லி சேவல் வளர்ப்பார்கள். அப்படியாக வடக்கே தலை வைத்து உயிர் விடுகையில்
வேண்டல் நிறைவேறிவிட்டதாக திருப்தி அடைவார்கள்.
சேவல் திருடி விற்று
வாய் வயிற்றைக் கழுவுகிறவர்கள்கூட ஆவணி மாதம் கூவும் சேவலைத் திருடமாட்டார்கள். கோழி
குஞ்சுகள் பொறித்து கொண்டை விடுகையில் ஒரு குஞ்சைக் கடைக்கிழமைக்கென்று ஏஞ்சி விடுவர். ஏஞ்சி என்பது அம்மனுக்கு இசைந்து விடுவது. ஆவணி
மாதம் முதல் முறையாக சேவல் கூவுகையில், "ஆவணி பொறந்தாச்சு, கொண்டை முளைச்சாச்சு" என்பர்.
பெண்களுக்குப் பிடித்த
மாதம் ஆவணி. ஆண்களின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்கள் ஆவணிக்காக காத்திருந்து
மாரியம்மன் பெயரைச் சொல்லி மஞ்சள் சேலை உடுத்தி ஒரு மாதம் கணவரிடம் விலகியிருப்பர்.
பெண்களின் பல்வேறு வேண்டல்கள் நிறைவேறுவது ஆவணியில்தான்.
கோவில் இல்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் சொல்லியிருந்தாலும் “மாரியம்மன் இல்லாத ஊர்களில்லை”
என்பதே உண்மை. மாரியம்மன் என்பது கோவிலோ கலசமோ அல்ல. வேப்பமரம். ஆவணி மாதத்தில் வேப்பமரம் விசேசமாகக் கொண்டாடப்படும்.
“யார் கடன் நின்றாலும் மாரி கடன் ஆகாது.” முத்துப் போன்ற அம்மை நோயை உண்டாக்குபவள்
மாரி. எனவே முத்துமாரி என்று அழைத்தனர். அம்மையைத் திணிக்கும் மாமருந்து வேம்பு என்பதால்
வேப்பமரத்தை முத்துமாரியாக வழிபடுகின்றனர். பெண்கள், குழந்தைகள் ஆவணி மாதத்தில் அவர்கள்
வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொடுப்பர்.
மாரியம்மன் பாடல்கள்
ஆவணி பிறந்துவிட்டால்
ஊர்கள்தோறும் மாரியம்மன் பாடல்கள் ஒலிக்கும்.
தீச்சட்டி வழிபாடு
ஒரு வாரம், பத்து
நாட்கள் விரதமிருந்து கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபடுவர். இத்தீச்சட்டி ஏந்துகையில்
நையாண்டி மேளம் முழங்கி ஆடிப்பாடுவர்.
கரக வழிபாடு
மலர்க் கரகம் சோடித்து
தலையில் ஏற்றி ஆடிப்பாடி ஊர்வலம் வருவர். குடத்தில் வேப்பிலை செருகி பூக்களைச் சுற்றி
கரகத்தை தலைமேல் வைத்து மேளதாளத்துடன் ஆடிவருவது கரகமாகும். அம்மனின் சினத்தைத் தணிக்க
இவ்வாறு வழிபடுவர். ஒற்றைக் கரகம், இரட்டைக் கரகம், முக்கரகம், நாற்கரகம், ஐங்கரகம்,
அறுகரகம், ஏழ்ககரகம், பொன்கரகம், நவக்கரகம், பத்தாம் கரகம் என்று எண்ணிக்கையில் கரகமெடுப்பர்.
வேப்பிலை இல்லாமல் பூக்களால் அலங்கரித்து ஆடும் கரம் பூங்கரகமாகும். எட்டு கரகத்தை
எட்டு என்று சொல்லாமல் பொன்கரகம் என்பர்.
ஆவணி விரதம்
ஆவணி மாதம் ஒவ்வொரு
ஞாயிறும் விரதமிருந்து மாலை அம்மனை வணங்கி விரதம் முடிப்பர். இதற்கு ஆவணி விரதம் என்று
பெயர். வாரத்தின் நான்கு நாட்களும் இந்த விரதத்தைப் பிடிப்பவர் உண்டு.
தீ மிதித்தல்
பெண்கள் மஞ்சள் நிற
சேலை அணிந்து இருப்பதொரு நாட்கள் விரதமிருந்து தீ மிதிப்பர். இதனை பூமிதித்தல், பூக்குழி
இறங்குதல் என்றும் சொல்வர்.
சூலம் குத்துதல்
முருகனுக்கு வேல்
என்றால் அம்மனுக்குச் சூலம். முகமெங்கும் மஞ்சள் அணிந்து நாக்கில் சூலம் குத்தி பம்பை,
உடுக்கை இசைத்து வழிபடுவர்.
சிறுதேர் இழுத்தல்
உடலில் மஞ்சள், திருநீறு
அணிந்து முதுகுப்புறத் தோலில் கொக்கி மாட்டி சிறுதேர் இழுப்பதாகும்.
செடல் சுற்றுதல்
ஒரு மரத்தை நட்டு
அதன் குறுக்கில் துளையிட்டு ஒரு மரத்தை நுழைத்து இரு பக்கங்களிலும் இருவரை கயிற்றால்
கட்டி சுற்றுதலைச் செடல் சுற்றுதல் என்பர்.
காப்புக் கட்டுதல்
அம்மன் பெயரால் நூலில்
மஞ்சள் முடிந்து கையில் கட்டிக்கொள்வது காப்புக்கட்டுதல் ஆகும். இறைவன் எங்களைக் காக்க
வேண்டும் என்று கையில் மஞ்சள் கயிறும் வீதியில் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுவர்.
அம்மன் கஞ்சி
அம்மை நோயால் பீடிக்கப்பட்டவர்கள்
மாரியம்மனை வேண்டி அம்மா கஞ்சி ஆக்கி ஊற்றுவார்கள்.
மஞ்சச் சேலை
பிறந்த மக்களுக்குச்
சிலர் மஞ்சச் சேலை எடுத்துக்கொடுப்பர்.
ஆவணி முழக்கம்
ஆவணி மாதத்து இடி
முழக்கத்தினை ஆவணி முழக்கம் என்பர். “ஆவணி மாசத்து முழக்குக்கு மழையுண்டு.” என்பது
பழமொழி.
ஆவணி அழகன்
ஆவணி மாதத்து வெற்றிலியை
ஆவணி அழகன் என்பர். அதாவது ஆடி மாதம் வெற்றிலைக் கொடி நட்டு அது ஏறிப்படற ஊன்றும் கோலுக்கு
ஆடிக்கால் என்று பெயர். அந்த ஆடிக்காலில் பற்றி தளிர்விடும் வெற்றிலையை ஆவணி அழகன்
என்பர்.
மடங்கல்இடி.
ஆவணியின் தமிழ்ப்பதம்
மடங்கல். ஆகவே இந்த மாதத்தில் இடிக்கும் இடியை மடங்கல் இடி என்பர்.
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டத்திற்கு அசடியும் சமைப்பாள் என்பது பழமொழி.. ஆவணி அவிட்டம் அன்றைக்கு புதிய பூணூல் அணிந்து வேதம்பாடுவர். இதற்கு நீண்ட நேரம் ஆகுமென்பதால் அன்றைய தினத்திற்கு அசடியும் சமைத்துவிடுவாள் என்கிறது இப்பழமொழி.
ஆவணி பழமொழிகள்
ஆவணி அழுகல் தூற்றல்; ஆவணி இலை அசைய, காவேரி கரைப்
புரள; ஆவணி தலை வெள்ளமும் ஐப்பசி கடை வெள்ளமும் கெடுதி; ஆவணி பறந்தால் புரட்டாசி, தாவணி
பறந்தால் புடைவை; ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்; ஆவணி மாதம் ஐந்தாந்தேதி சிங்க
முழக்கம், அவ்வருஷம் பெருமழை; ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு
போனாளாம் ஆகியவை ஆவணியின் பெயரால் விளங்கும் பழமொழிகள் ஆகும்.
ஆவணி நடவு
ஆவணியில் அகல நடு.
ஐப்பசியில் அணைத்து நடு என்று கிராமத்தில் ஒரு பழமொழி விளங்குகிறது. அதாவது ஆவணி மாதம்
முன்மழை என்பதால் நடும் நெல் நன்கு தூர்க்கட்டும். ஆகவே நடும் பயிரை அகல நடவேண்டும்.
ஐப்பசி மாதம் பின்மழை என்பதால் மழை பெய்யாமல்கூட போகலாம். ஆகவே நடும் பயிரை அணைத்து
அருகருகே நடவேண்டும்.
ஆனைக்கொம்பன்
ஆனைக்கொம்பு என்றொரு
நெல் வகை இருக்கிறது. ஆவணி மாத விதைப்புக்கு உகந்த நெல் இது. இந்த நெல்லோடு ஆவணி மாதம்
பழமொழியாக மக்கள் புழக்கத்தில் உள்ளது. “ஆவணி மாதம் விதைத்தால் ஆனைக்கொம்பு தானாய்
விளையும்.”
ஆவணி மூலப்பெருவிழா
சிவபெருமானின் திருவிளையாடல்களில்
ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்த கதை ஆவணி மாதம் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மதுரை
மீனாட்சி அம்மன் கோவில் ஆடியின் பிற்பகுதியில்
தொடங்கும் இந்த விழா ஆவணி நடுப்பகுதியில் நிறைவடையும்.
ஆவணிக் கிழவி
கிராமங்களில் அம்மாத்தாயி
என்பவர்கள் உண்டு. யார்க்கேனும் அம்மை கண்டால் அவர்களுக்காக அம்மனை வேண்டி நோயைத் தணிப்பவர்கள்.
இவர்கள் ஆவணி பிறந்துவிட்டால் மஞ்சள் சேலை உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கையில்
வேப்பிலையுடன் தட்சணைக் கேட்டு வருவார்கள். இவர்களை மக்கள் ஆவணிக் கிழவி என்று அழைக்கிறார்கள்.
இப்படியாக ஆவணி மாதம்
மக்களோடு இரண்டறக் கலந்திருக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக