ஆடித் திங்களும் ஆடித் தமிழும்
ஆடி மாதம் பிறந்துவிட்டது. எதையும் ஆட்டிப் பார்ப்பதற்கென்றே வருவதால் அதற்கு ஆடி என்று பெயர் என்பதாக வேடிக்கையாக கிராமத்தில் சொல்வர். ஏழை மக்களைப் பயங்காட்டும் மாதம் இது. ஆடி காத்துக்கு அம்மியும் பறக்கும் என்பது சொலவம். அம்மி மட்டுமல்ல, ஆடி மாதத்தில் கொடுக்கும் வாக்குறுதியும்கூட காற்றில் பறந்துவிடுவதுண்டு. இதிலிருந்து பிறந்ததே ஆடிவாக்கு. “அவன் கொடுத்தது சத்திய வாக்கல்ல, ஆடிவாக்கு.” என்பர் கிராமத்தவர்கள். ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தை குடும்பத்தை அலைக்கழிக்கும் என்று இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்திலும்கூட மக்கள் நம்பிவருகிறார்கள். ஆடியிலே பிறந்தவன் என்கிற சொல் புழக்கத்தில் உண்டு.
ஆடி
வந்தால் கூடவே ஜவுளிக்கடை தள்ளுபடி விளம்பரமும் வந்துவிடுகிறது. ஆடி வறட்சியான மாதம்
என்பதால் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை சற்றே குறையும். சில பொருள்கள் ஆடி
மாதத்தில்தான் விலை கட்டுக்குள் அடங்காமல் எகிறும். ஊர்க்கோவில், நாட்டார் தெய்வங்கள்,
குலதெய்வ வழிபாடு ஆடியில் நடப்பதால் இம்மாதத்தில் ஊர்ச் சந்தைகளில் ஆட்டுக்கிடாக்கள்
குதிரை விலையில் விற்கும்.
சாமானியன்,
விவசாயிகளின் வாழ்வில் ஆடி முக்கிய மாதமாக விளங்குகிறது. ஆடி பிறப்பைக்கொண்டும் ஆடியில்
பெய்யும் மழையைக்கொண்டும் அவ்வருடத்தின் செழிப்பையும் வளத்தையும் கணித்துக்கொள்வார்கள்.
ஆடி வளர்பிறை பஞ்சமி ஞாயிற்றுக் கிழமைகளில் வந்தால் கொஞ்சம் மழை பெய்யும். திங்கக்
கிழமை வந்தால் வெள்ளங்காணும். செவ்வாயில் வந்தால் பஞ்சம் விரித்தாடும். வியாழனில் வந்தால்
நல்ல விளைச்சல் காணும். வெள்ளியில் வந்தால் பெருமழை. சனியில் வந்தால் விளைச்சல் பொய்யும்
என்பது நம் முன்னோர்களின் கார்கணிப்பு.
ஆடியின்
பெயரால் பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன. ஆடிச்சொல்
அத்தோடு போச்சு. உறுதியற்ற சொல்லை ஆடிச்சொல்லோடு
ஒப்பிட்டுச் சொல்வர். ஆடி மாதத்து மேகத்திற்கு
ஆடிக்கரு என்று
பெயர். “ஆடிக்கரு ஏமாற்றாது” என்பது வழக்கு.
ஆடிக்கழைத்தல் புதிதாக திருமணமான தம்பதிகளை வீட்டுக்கு
அழைத்து பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு மாப்பிள்ளையை அவரது வீட்டுக்கு அனுப்பிவிடுவர்.
ஆடியில் தம்பதிகள் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பதால் இருவரையும் சற்றே
பிரித்துவைக்க முன்னோர்கள் ஆடிக்கழைப்பதை முக்கிய நிகழ்வாக கொண்டார்கள்.
ஆடிக்கால் வெற்றிலையோடு தொடர்புகொள்ளும் சொல்.
வெற்றிலைக்கொடி படரும் நோக்கோடு வயலில் ஆடி மாதத்தில் நடும் அகத்தி காலுக்கு ஆடிக்கால்
என்று பெயர்.
ஆடிக்காற்று
மிகவேகமானது. இன்றைக்கும் கிராம வீடுகள் குடிசைகளாக இருக்கையில் ஆடி மாதத்தில் கூரையை
கயிறுகொண்டு கட்டி வேய்ந்த கூரைகள் காற்றக்குப் பறக்காமல் பார்த்துக்கொள்வர். ஆடிக்கிருத்திகை முருகனை வழிபட உகந்த நாள்.
ஆடியின்
பெயரால் மூன்று நெல் வகைகள் உள்ளன. ஆடிக்குறுவை குறுகிய காலத்தில் விளைந்து பஞ்சத்தைப் போக்கும்
முக்கிய நெல்வகை. ஆடிக்கோடை
என்றொரு வகை நெல் இருக்கிறது. இந்நெல் ஆடி மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
ஆடிவாலான் என்று
அபூர்வமான ஒரு வகை நெல் இருக்கிறது. ஆடி மாதத்தில் பயிராகும் நெல் இது.
ஆடிக்கஞ்சி
ஆடி மாதத்தில் மாரியம்மனுக்கு வழிபாடு நடத்தி ஞாயிறு அன்று கஞ்சிக் காய்ச்சி ஊற்றுவார்கள்.
பல ஊர்களில் ஆவணியில் இக்கஞ்சி ஊற்றினாலும் பெரு நகரங்களில் ஆடியிலேயே ஊற்றுகிறார்கள்.
விவசாயப் பட்டத்தில் ஆடிப்பட்டம் முக்கியமானது.
ஆடி மாதத்தில் பயிரிடும் பருவம் ஆடிப்பட்டமாகும். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி.
இவைதவிர ஆடி மாதத்தில் கொண்டாடும் பண்டிகைக்கு ஆடிப்பண்டிகை என்று பெயர். வீட்டில்
வளர்க்கும் கோழிகளுக்கு ஆடியில் நோய் வருவதுண்டு. இதனை மக்கள் ஆடிக்கழிச்சல் என்பர்.
ஆடிப்பால்
கிராமங்களில் முக்கியமான உணவு. தேங்காயை அரைத்து பால்க்காய்ச்சி ஆடி மாதத்து விருந்துகளில்
பரிமாறுவார்கள். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் நிகழும் அம்மன் வழிபாடு ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகிறது. புனல் நாடு
என்றும் சீத நாடு என்றும் நீரரம்ப நாடு என்றும் அழைக்கப்படும் காவிரி பாயும் ஊர்களில்
ஆடிப்பெருக்கு
முக்கிய விழாக்களில் ஒன்றாகும். ஆடிப்பதினெட்டு அன்று பெருக்கெடுக்கும் காவிரியை வழிபடும் பொருட்டு புதிய
மணமக்கள் தாலிக் கயிற்றை மாற்றி புதிய கயிறு அணிந்து வழிபடும் விழா அது. ஆடி அமாவாசை இறந்த முன்னோர்களுக்குப் பிண்டம்
படைத்து வழிபடுவர். ஆடியற வெட்டை என்கிற சொல் சில ஊர்களில் மட்டும் புழக்கத்தில்
உள்ளது. இச்சொல் தற்போது ஆடிக்கழிவு என்கிற பொருளில் விளங்குகிறது. ஆடி மாதத்தில்
உண்டாகும் அகவிலை இது. ஆடியுறுதி என்கிற
சொல் குறிப்பிட்ட சில பகுதிகளில் புழக்கத்திலுள்ளது. ஆண்டு வரவு செலவுக்கணக்குகளை இம்மாதத்தோடு
முடித்துக்கொள்ளும் நாள் இது. இதன்பொருட்டே ஆடிக்கழிவு கொண்டுவரப்பட்டது. இம்மாதத்தோடு
பழைய சரக்குகளை விற்று புதிய சரக்குகள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
ஆடிவெள்ளியை
மக்கள் பெரும்பூஜை நாளாகக் கொண்டாடுகிறார்கள். ஆடிவெள்ளி அம்மன் வழிபாட்டிற்கு உகந்தது.
ஆடிவேட்டை எனும்
பெயரில் சில ஊர்களில் சில சமூக மக்கள் திருட்டு விழாவாக கொண்டாடிவருகிறார்கள். கள்வர்கள் யாரேனும் ஒருவர்
வீட்டில் திருடி தன் திருட்டுத்தனத்தை மெச்சிக்கொள்ளவர். கள்வர் கையும் களவுமாக பிடிகொண்டால்
ஆடிவேட்டைக்குச் செய்தேன் என்று சொல்லி தப்பித்துக்கொள்வர்.
ஆடி
மாதப் பழமொழிகள் உள்ளன. “ஆடி விதை தேடிப்போடு”, “ஆடி மாதத்தில் குத்திய குத்து ஆவணி
மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்”, “ஆடிப்பட்டம் தேடி விதை”, “ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கு
ஒரு தரம்”, “ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடி”, “ஆடிக்காற்றில் எச்சிற் கல்லைக்கு
வழியா”, “ஆடிக்காற்றில் பீளைப்பூ பறந்தாற்போல”, “ஆடிக்காற்றில் இலவம்பஞ்சு பறந்தாற்போல”,
“ஆடிக்காற்றிலே அம்மி பறக்கையிலே இலவம்பஞ்சு எம்மாத்திரம்”, “ஆடிக்கரு அழிந்தால் மழை
குறையும்”, “ஆடியிலே காத்தடிதால் ஐப்பசியில் மழை பெய்யும்”, “ஆடிச் செவ்வாய் தேடிக்குளி”,
“ஆடிக்குக் கூழும் அமுதம்”, “ஆடிப்பிறை தேடிப்பிடி”, “ஆடிப் பிறந்தால் ஆசாரியார், தை
பிறந்தால் தச்சப்பயல்”, “ஆடிப் பிறந்தால் வெல்லப் பானையைத் திற, தை பிறந்தால் உப்புப்
பானையைத் திற”,.“ஆடி மாதத்தில் நாய் போல”, “ஆடி மாதம் அவரைப் போட்டால் கார்த்திகை மாதம்
காய்க்காய்க்கும்”, “ஆடி வாழைத் தேடி நடு”, “ஆடி விதைப்பு ஆவணி நடவு”, “ஆடி வெப்பல்
ஆட்டுக்கிடைக்குச் சமம்”
ஆடிமாதம்
கோடைக்காலத்திற்குப் பிறகு வருவதால் ஆடிக்காற்றுக்குத் தொற்றுநோய்களும் வெப்பநோய்களும்
இம்மாதத்தில் உடம்பிலிருந்து சென்றுவிடும். கோடை நோய்களில் முக்கியமானது அம்மை. ஆடி
காற்றுக்கு அம்மையும் பறக்கும் என்கிற பழமொழியே அம்மி என்றாகிவிட்டது. இப்படியாக ஆடி
மாதம் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக